{இதன் முதல் பாகம்}

இந்த நேர்காணலில் பல விநோதக் கருத்துகளும் தென்படுகின்றன. உதாரணமாக,

{மேற்கோள்}

கேள்வி: உலகமயமாக்கல் என்பது தவிர்க்கமுடியாததே என சில மேலைதேய அறிஞர்கள் கருதுகிறார்கள். … இதிலே உலகமயமாக்கல் மூலம் தலித்துகள் பொருளுற்பத்தியில் நேரடியாகப் பங்கு கொண்டு ஓரளவு பொருளியல் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தலாம் என்றும் சில தலித் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் ‘டங்கல் என்னும் நயவஞ்சகம் என்றொரு சிறு நூலை வெளியிட்டுள்ளேன். … இந்தியாவினுள்ளே கணிப்பொறி வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் அதுவொரு பயனுறு அறிவியல். வெள்ளைக்காரன் கொண்டுவந்த சூத்திரங்களை மனனம் செய்யும் பார்ப்பனர்களுக்குச் சாதகமான கல்விமுறையை கணிப்பொறி உடைத்துள்ளது. உனக்கு என்ன மனப்பாடம் செய்யத் தெரியும்? என்ற கேள்வியைத் தவிர்த்து, உனக்கு என்ன செய்யத் தெரியும் என்ற கேள்வி கல்வித்துறையிலே கேட்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இது நமக்குச் சாதகமான சில பின்விளைவுகளை உண்டாக்கும்.

ஒரு காலத்திலே கிராமத்திலிருந்து பார்ப்பனர்கள் நகரங்களுக்குச் சென்று குடியேறினார்கள். … அதிகாரங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலே…. இங்கிலாந்தின் கை தளர்ந்த போது அமெரிக்காவுக்குப் போனார்கள். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலே இருக்கக்கூடிய இந்தியர்களில் கணிசமானோர் பார்ப்பனர் அல்லாதவர்.

{/மேற்கோள்}

பேராசிரியர் தொ.பரமசிவன் டங்கல் திட்டம் குறித்து ஒரு நூலையே எழுதியிருக்கிறார், எனவே உலகமயமாக்கல் அதன் சாதக பாதங்களைப் பற்றி அவர் நன்றாகவே தெரிந்திருக்கச் சாத்தியமிருக்கிறது. அவரது கருத்துப்படி அமெரிக்காவிலே பா.அ எண்ணிக்கை பா எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. இந்தத் தரவு அவருக்கு எங்கிருந்து கிட்டியது என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. இப்படியரு தரவு அமெரிக்காவிலிருந்து அரசமைப்புகள் சார்பாகவோ, அல்லது நம்பத்தகுந்த தனியார் (உதாரணமாக, பல்கலைக்கழக ஆய்வறிக்கை) அவருக்குக் கிட்டியிருக்கச் சாத்தியமில்லை. ஏனென்றால் அமெரிக்கா அரசாங்கத்திற்கோ அல்லது பல்கலைகளுக்கோ இது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட ஆய்வுகள் அமெரிக்கா போன்ற நாடுகளில் இனவகைப்படுத்தல் (Racial Profiling) என்று மனித உரிமை குழுக்கள் மூலமாக எதிர்க்கப்படும்.

அதுவல்லாது இந்தியாவிலிருந்து குடியேற்றம் நடக்கையில் இந்திய அரசாங்கம் சார்பாக இத்தகைய தரவுகள் தயாரிக்கப்படுகின்றனவா என்பதிலும் ஐயமிருக்கிறது. அவ்வாறு இருந்தால், தாழ்த்தப்பட்ட (அதிலும் உயர்கல்வி பெற்ற) மக்கள் இந்தியாவை விட்டு பெருமளவில் குடிபெயர்ந்தால் அது இந்திய அரசுக்குப் பெரும் தலைவலியைத் தரவேண்டும். பள்ளிகளில் தொடங்கி, கல்லூரி, வேலை வாய்ப்பு என்று இறக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்களைத் தாங்கிப் பிடிக்கும் இந்திய அரசுக்கு இது ஒரு பெரும் தோல்வியாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் பார்ப்பனர்களைக் காட்டிலும் மற்றவர்களை இந்த அளவிற்கு உயர்த்த இந்திய அரசாங்கம் பலமடங்கு அதிகம் செலவழிக்கிறது, இவர்களின் மூளை விரயம் பார்ப்பனர்களின் மூளை விரயத்தைவிட அரசாங்கத்திற்குப் பெரும் இழப்பு.

இந்தத் தரவுக்கு தகுந்த ஆதாயத்தைப் பேராசிரியர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு முதிர்ந்த கல்விமானாகிய அவர் ஆதாரம் இல்லாமல் அப்படி வார்த்தைகளை வீசமாட்டார் என நம்புகிறேன்.

* * *
அவரது கருத்துப்படி நகரமயமாக்கலும், நாடு பெயர்தலும் ஒருவருக்கு அதிக அதிகாரங்களை வழங்கவல்லன. அப்படி உலக வரலாற்றில் எந்த ஒரு சமூகமும் சிறிய அளவில் இடம் பெயர்ந்து அதிகாரவர்க்கமான வரலாறு இல்லை. (குறிப்பாக பொருளாதாரத்தில் தாழ்ந்த இடத்திலிருந்து உயர்ந்த இடத்திற்குச் சிறுபான்மையினராகக் குடியேறும் பொழுது). இப்படித்தான் என்றால், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், மலேஷியா, மேற்கு இந்தியத் தீவுகள், உகாண்டா என்று இந்தியர்கள் அடிமையாக இருந்த வரலாறுகளை எப்படி நியாயப்படுத்தலாம்?

* * *

இப்படியாக பார்ப்பனர்களோ, அல்லாதவர்களோ, பொதுவில் இந்தியர்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கில் குடிபெயர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றி காண்பதாக எந்த விதமான காரணிகளும் உணர்த்தவில்லை (உதாரணத்திற்கு வெற்றிகரமான சீனர்கள்/இந்தியர்கள் வீதம்). பொதுவில் அமெரிக்காவில் நிரல் எழுதும் இந்தியர்கள் அமெரிக்கர்களைக் காட்டிலும் மிகவும் குறைந்த வாழ்க்கைத் தரத்திலேயே இருக்கிறார்கள். ஓரளவிற்குச் சுயமாக மென்கலன் நிறுவனங்களை நிர்வகிப்பவர்களில் பெரும்பாலானவர் வழக்கம் போல் குஜராத்திகளும் சிந்திகளும்தான்.

அதாவது இந்தியப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருப்பதுதான் இழிவு. அமெரிக்க ஆண்டைகளுக்குப் பல்லக்குத் தூக்குவதில் இல்லை எனும் உன்னத மனப்பான்மை. மகன் செத்தாலும் சரி, மருமகள் தாலியறுத்தாக வேண்டும்.

* * *

இப்படியரு ஆதாரபூர்வ தரவு பேராசிரியரிடம் இருக்கும் என்றால் இது தொடர்பான இன்னொரு தரவையும் தெரிந்து கொள்ள ஆர்வம் வருகிறது. அது கணினி அறிவுபெற்ற பார்ப்பனர் அல்லாதவர்களில் எத்தனை சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள்? எத்தனை சதவீத்த்தினர் உலகம் முழுதும் பரவி ஆளப் புறப்பட்டுள்ளார்கள்? என்பது. அப்படியரு தரவு கிடைக்கும் பட்சத்தில் அது என்ன உணர்த்தக்கூடும். பார்ப்பனர்களோ, அல்லாதவர்களோ, ஓரளவுக்குப் படிப்பு கிடைத்தவுடன் சிறகு முளைத்த கிளியாக பறந்து செல்கிறார்கள். இது பொதுவில் நம்மிடம் இருக்கும் இழிநிலையைக் காட்டுகிறது. இதுதான் நிதர்சனமான உண்மை. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்நிலையிலே இருக்கிறார்கள். அது சவுன்டிப் பிராமணனாக இருந்தாலும் சரி, சுடலை மாடனாக இருந்தாலும் சரி. படிப்பு கிடைத்தவர்கள் (அல்லது கிடைத்த வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உயர முயற்சிக்கிறார்கள், உயர்கிறார்கள்). இதில் சாதிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.

* * *
பேராசிரியரின் கூற்றுப்படி கணினி அறிவு பெற்றவர்கள் எல்லோரும் இடைநிலைத் தரகர்களை விடுத்து நேரடியாக வாழ்வில் முன்னேறுகிறார்கள். அப்படியென்றால் எல்லோருக்கும் கணினியைக் கரைத்துப் புகட்டிவிடலாமே! மனப்பாடம் செய்துதான் பார்ப்பனர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாயங்கள் இருக்கின்றனவா? இவரது வாக்குப்படி நேற்றுவரை இந்தியாவில் முன்னேறியவர்கள் எல்லாம் மனப்பாடம் செய்து ஒப்பித்துத்தான் முன்னேறினார்களா?

இந்த இடத்தில் கணினித் தொழிலை விடுத்து பிற தொழில்நுட்பங்களை எப்படி வகைப்படுத்தலாம்? அதாவது தகவல் தொழில்நுட்பம் ஒன்றுதான் மனனம் செய்யத் தேவையில்லாத அறிவு. இயற்பியல், உயிரியல், மருத்துவம், வாகனத் தொழில்நுட்பம், வானூர்தித் தொழில்நுட்பம், நிர்வாகம், மேலாண்மை, போன்றவை எல்லாம் மனனத்தின் அடிப்படையிலானவை??

* * *
கணினி அறிவால் இடைத்தரகர்கள் இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகம் முன்னேறிவிடப் போவதில்லை. எல்லா வாய்ப்புகளையும் போலவே, இதுவும் பிரிவுகளுக்குள்ளே ஒரு சிலரை முன்னேற்றி மற்றவர்களை அதே நிலையில் இருத்தி வைக்கப்போகிறது (அல்லது இரண்டாம் வெப்ப இயக்கவியல் விதிப்படி இன்னும் சீரழிந்து போகப்போகிறது). உயர்சாதியினர் என்ற காரணத்தால் அரசியல் பூர்வமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிலரிடமும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையினால் சலுகைகள் அளிக்கப்பட்ட இன்னொரு சமூகத்திடமும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் (அல்லது சாமர்த்தியமாகத் தன் சமூகத்தில் பிறருக்கு வாய்ப்பை இழக்கச் செய்யும்) ஒரு சிலரே பொருளாதார நிலையில் உயரப்போகின்றனர். அப்படி உயர்பவர்களுக்கு தங்களைச் சேர்ந்தவர்களை ஓரளவாவது தாழ்ந்த நிலையில் வைப்பதுதான் பரிணாம விதிகளின்படி ஆதாயங்களைத் தரும். அவ்வாறு இருக்க ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் ஒரு ‘புதிய பார்ப்பன’ குடிகள் இரண்டு தலைமுறைகளுக்குள்ளே தோன்றும், இதுதான் அறிவியல்பூர்வமான உண்மை.

இதற்கான நேரடி நிரூபணம் பேராசிரியரின் கூற்றிலேயே இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு கல்வியறிவு பெற்ற பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. இருவரும் தங்கள் அதிகாரத்தைப் பரப்பிக்கொள்ளவும், நிலைக்கச் செய்யவும் நகர்மயமாதலிலும், முதலாம் உலக நாடுகளில் குடியேறுதலிலும் ஈடுபடுகிறார்கள் — எள்ளளவும் வித்தியாசமின்றி.

* * *

என்னுடைய அறிவின்படி தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அவர்களுக்கு ஊன்றுகோல்களைக் கொடுப்பதால் வரப்போவதில்லை. ஊனமாக்கப்பட்ட மனதிற்கு ஒரே மருந்து கல்விக் கண்ணைத் திறப்பது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க அவர்களை ஆயத்தப்படுத்துவதுதான் சமூக வளர்ச்சிக்கு ஒரே வழி. சுயமான சிந்தனை இல்லாத சமூகம் மேய்ப்பவர்களின் பின்னால் ஆட்டுக் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கும். ஆனால் சிந்திக்கவிடாமல் அவர்களை அந்த அளவிலேயே வைத்துக்கொள்வதில்தான் வெற்றியின் இரகசியமே இருக்கிறது, அது பழைய பார்ப்பனாக இருந்தாலும் சரி; நிரலெழுதும் புதிய பிராமணர்களாக இருந்தாலும் சரி. இந்த இழிந்த நிலை வேதனையைத்தான் தருகிறது.

பழைய பார்ப்பானை மக்கள் நன்றாக இனம் கண்டுகொண்டு விட்டார்கள். அந்த வழிமுறைகள் இனி பலிக்கப்போவதில்லை. ஆனால் இனம் கண்டுபிடிக்க முடியாமல் ஆட்டு மந்தைகளின் நடுவே பதுங்கும் ஓநாய்களான புதிய பார்ப்பனர்கள்தான் மிகவும் வெற்றிகரமான பரிணாம வளர்ச்சி.

* * *

அள்ளியெறியப்பட்ட தரவுகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது சிலருக்குச் சிரிப்பை வரவழைக்கக்கூடும். ஆதாரம் கேட்க முக்கிய காரணம் அது ஒரு பல்கலைக்கழகத் துறைத்தலைவரிடமிருந்து வந்திருப்பதுதான். சாதாரணமாக, நம்மூரில் அரசியல்வாதிகளிடமும், சமூக சேவை (போர்வை) அமைப்பினரிடமும் இப்படி ஆதாரம் கேட்டுப் பெறும் நம்பிக்கையை இழந்தாகிவிட்டது. ஆனால் தேர்ந்த கல்விமான்களாவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சமூகத்தில் இருக்கும் கடைசிகட்ட நம்பிக்கை. அது இல்லாத பட்சத்தில் அவர்களால் கல்வி புகட்டப்பட்டு உருவாகும் சமூகம் எவ்வழி நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

* * *

இந்த விமர்சனத்திற்கு அடிநாதமாக என் மனதில் இருப்பது ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந்த நிலையிலே இருக்கிறார்கள்; அவர்களை உயரவிடாமல் தடுக்க எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறதே’ என்ற ஆதங்கம்தான். இதைப் புரிந்துகொள்ளாமல் எழுப்பப்படும் எதிர்வினைகளுக்கு நான் எந்தவிதமான பதிலும் தரப்போவதில்லை

* * *