இங்கு டொராண்டோவின் இலக்கியத் தோட்டம் அமைப்பில் “காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவிஞர் சேரன் நிகழ்வின் ஒருங்கமைப்பாளராக இருந்தார். அதில் இலங்கை எழுத்தாளர், விமர்சகர் திரு மு.பொ – “ஆத்மார்த்தமும் கவிதையும்” என்ற தலைப்பிலும், திரு வரன் “இன்மையில் பிரதிகள்” என்ற தலைப்பில் பின்நவீனத்துவத்தைப் பற்றியும் பேசினார்கள். மூன்றாவது ஆளாக அடியேன். கொடுத்த தலைப்பை வைத்துக் கொண்டு “மெய்காணலில் அறிவியல் வழிகள்” என்ற உபதலைப்பில் பேசினேன். அது பல நாட்கள் கழித்து, கடந்த “மழை” இதழில் பிரசூரமாகியிருக்கிறது. நான் எழுதி இந்தியாவிலிருந்து வரும் பத்திரிக்கையில் முதல்தடவையாக வருவது இதுதான். வந்திருக்கிறது என்று அ.முத்துலிங்கம் சொன்னார், என்றாலும் இந்தியப் பத்திரிக்கைகளின் முன் அனுபவத்தை வைத்து நேற்று மாலை பார்த்தபிறகுதான் நம்பமுடிந்தது. ஏனென்றால் ஒருமுறை கட்டுரை கேட்ட தீராநதிக்கு இதைத்தான் அனுப்பினேன். அவர்கள் போடவில்லை. பிறகு இரண்டு மூன்று முறை அவர்களுக்கு எழுதி உங்கள் அனுமதியுடன் அதை வேறு யாருக்காவது அனுப்பலாமா என்றெல்லாம் கேட்டுப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து பதிலில்லை.

முழுக் கட்டுரையும் என்னுடைய வலைப்பக்கதில் இட்டிருக்கிறேன்.