சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரியின் சங்கராபரணி எனும் கவிதைத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது. இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் ஒன்று;

சங்கராபணி – மாலதி மைத்ரி

அதனதன் உலகம்

நினைவுகளை கொத்திக் கொத்தி
தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய்
மரங்கொத்தியின் அலகில்
சிக்கித் தவித்து
சிறு காற்று கிளை அசைக்க
பிடிநழுவி பட்டாம் பூச்சியாய்
திசைவிலகும் நீ

தழும்பாய் வளர்கிறது மரம்
இரை ஏமாற்றிய பசியுடன் பறவை
வானத்தை தன் சிறகுகளில்
சுருட்டி அமர்ந்திருக்கிறது
நீ எங்கு போய்விடுவாய் என்று

பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்குள் விரிகிறது
தேரையின் இன்னும் ஒர் உலகம்

* * *

முழு கவிதைத் தொகுதியையும் குறித்த என்னுடைய விமர்சனைத்தை இன்னொரு நாள் எழுதுவேன். என்றாலும் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது மனதில் நெருடிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஒற்றெழுத்துக்களின் தேவை முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. சமகாலக் கவிஞர்களுக்கும் கதையாசிரியர்களுக்கும் இலக்கணம் முற்றிலும் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டிருப்பது சோகமான உண்மை. இவர்களிடமிருந்துதான் இது இறங்கி வெகுஜன எழுத்தாளர்களையும், தொடர்ந்து சராசரி மனிதர்களையும் ஆட்டுவிக்கிறது.

எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் பொழுது அதை முடிந்தவரைப் பிழையின்றி முடிக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். அரைகுறைக் காரியங்கள் சான்றான்மைக்கு உகந்தன அல்ல. இவர்கள் எல்லோரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது; அடிப்படை இலக்கணப்பிழைகளுடன் எழுதி உங்களால் ஆங்கிலத்தில் (உதாரணத்திற்கு தி ஹிந்துவில் ஆசிரியருக்குக் கடிதம்) பதிப்பிக்க முடியுமா? ஏன் தமிழ் தாழ்ந்து போக வேண்டும். இவர்களில் பலருக்கு இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவர்கள் படைப்பாளியின் அடிமடியில் கைவைப்பதாகச் சீறி எழுவார்கள். தங்கள் சிறுமையை வீறு கொண்டு எழுந்து நியாயப்படுத்தும் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போவதைத் தவிர வேறு விடிவு இல்லை.

* * *

“It’s quicker, easier, and involves less licking.” (1994, Douglas Adams, on the benefits of speaking to his fans via e-mail)

* * *