கவிச்சக்ரவர்த்தி என்று புகழ் பெற்ற சயங்கொண்டார் உண்மையிலேயே முடிசூடா அரசர்தான். கலிங்கத்துப் பரணியின் பாடல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை.

பொரிந்த காரை கரிந்த சூரை
புகைந்த வீரை எரிந்தவேய்
உரிந்த பாரை எரிந்த பாலை
உலர்ந்த ஓமை கலந்தவே

உதிர்ந்த வெள்ளில் ஒடுங்கு நெல்லி
உணங்கு தும்பை உலர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி
பிளந்த கள்ளி பரந்தவே

வற்றல் வாகை வறந்த கூகை
மடிந்த தேறு பொடிந்தவேல்
முற்ற லீகை முளிந்த விண்டு
முரிந்த புன்கு நிறைந்தவே

என்ற பாலை நிலக்காட்சியின் ஓசை நயமாக இருக்கட்டும்,

உந்திச் சுழியின் முளைத்தெழுந்த
உரோமப் பசுந்தா லொன்றிலிரண்டு
அந்திக் கமலம் கொடுவருவீர்
அம்பொன் கபாடம் திறமினோ

(தொப்புளில் முளைத்து எழுந்து பசுமையான மயிர்க்கொடியான ஒரு தண்டில், மாலை நேரத்தில் குவிந்திருக்கும் தாமரை போன்ற இரண்டு முலைகளைச் சுமந்துவரும் பெண்களே, அழகிய பொன்னாலான கதவுகளைத் திறந்திடுங்கள்)

என்பது போன்ற பெண்கள் பற்றிய வர்ணனைகளாக இருக்கட்டும் செயங்கொண்டார் அசத்தலாகத்தான் இருக்கிறார். இன்னும் இவரது போர்க்கள வர்ணனைகள், காளி வழிபாடு போன்றவை கலிங்கத்துப்பரணியை செவ்விலக்கியங்களில் தனித்துக் காட்டுகிறது. காளி கூனிக்குக் கூறியது, கர்ப்பிணிப் பேய்க்குப் படையல் இடுதல், போன்றவற்றை இக்கால மாந்திரீக யதார்த்தவாதக் கோட்பாடுகளுக்கு உட்படுத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். சோழ நாட்டுக் கவிச்சக்கரவர்த்தி இலத்தீன் அமெரிக்க மார்க்வெஸ்களுக்குச் சற்றும் சளைத்தவராகத் தெரியவில்லை. சமகால விமர்சகர்களிடமும் இலக்கியவாதிகளிடமும் இந்தக் கருத்து எடுபடாது; அவர்கள் இது பத்தாம் பசலிப் பேய்க்கதை என்றும் மூன்றாம்தர காளி வழிபாடு என்றும் ஒதுக்குவார்கள். உண்மையில் செயங்கொண்டார் ஒரு உலோகாயதர், அவர் காளி வழிபாடு, பேய்க்குப் பூசையிடுதல் என்று பாடியிருக்க இது அதீதப் புனைவாக அல்லது மாந்திரீக யதார்த்தவாதமாக இருக்கச் சாத்தியக்கூறுகள் அதிகம்.

இதுபோன்ற கருத்தை முன்னிருத்தும் பொழுது சமகால இலக்கியவாதிகள் நம்மை “அற்பப் பதரே!” என்பதைப் போல் புறங்கையால் ஒதுக்குவார்கள். நம்மூர் மாவைத்தான் அவர்கள் திரும்ப அறைக்கிறார்கள் என்று ஒருக்கால் நிறுவப்பட்டால், அல்லது நீங்கள் தோசை என்று நினைத்துச் சுடுவதை ஒருகாலத்தில் ஆப்பம் என்று அழைத்தார்கள் என்று காட்டிவிட்டால் அவர்களது தலைக்கு மேல் இருக்கும் ஒளிவட்டம் கழன்று விழுந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். தாங்கள் மார்க்வெஸ் கோத்ரம், குந்தர் கிராஸ் பரம்பரை, உம்பர்த்தோ ஈக்கோ சாதி என்று அடையாளம் காணுவதில்தான் அவர்களது பெருமையே இருக்கிறது.

தமிழ் செவ்விலக்கியத்தில் மடல் இலக்கியம் ஒரு முக்கிய/சுவாரசியமான கூறு. செயங்கொண்டாரின் காராணை விழுப்பரையன் மடல் குறித்து இன்னொரு நாள் எழுத வேண்டும்.