சில நாட்களுக்கு முன் டொராண்டோ பல்கலையில் நடந்த இரத்ததான முகாமிற்கு தானமளிக்கச் சென்றிருந்தேன். 1990 முதல் 1996 வரை, இந்தியாவில் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இரத்ததானம் செய்துவந்தேன். இதுதவிர IISc-ல் படிக்கும் பொழுது அவரசங்களுக்கு இரத்ததானிகளை ஏற்பாடு செய்து உதவும் அமைப்பில் முக்கிய அங்கத்தினனாகவும் இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் இரத்தமளித்ததே இல்லை. பொதுவில் யாரைச் சென்றுபார்ப்பது, முகாம் எங்கே நடக்கும் போன்ற விபரங்கள் உள்ளூர் மொழி தெரியாததால் மத்தியப் பிரதேஷிலும், ஜப்பானிலும், போர்த்துகலிலும் சாத்தியமின்றிப் போனது. இங்கே கூப்பிடு தூரத்தில் இரத்ததான முகாம் வருகிறது என்று தெரிந்து, நேரத்தைத் தயாராக வைத்துக்கொண்டேன்.

மதிய உணவு இடைவேளையில் முகாமிற்குச் சென்றேன். மிகவும் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்கலை மாணவ, மாணவியர் விசேட டி.சர்ட்களை அணிந்துகொண்டு பளிச்சென்றிருந்தனர். (ஒரு முறை பெங்களூர் இராமையா மருத்துவக் கல்லூரியில் இரத்தமளித்துக் கொண்டிருந்த பொழுது கட்டிலுக்கு அடியிலிருந்து ஒரு நாய்க்குட்டி செல்வதைப் பார்த்தபின் அடுத்த பலவாரங்கள் தூக்கமின்றித் தவித்தது நினைவுக்கு வருகிறது). பழரசம் வேண்டுமா? என்று அன்போடு உபசரிக்கப்பட்டேன்.

பிறகு வழக்கமான, கேள்விகள். குறிப்பாக “முன்னர் இரத்ததானம் அளித்ததுண்டா?” என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலையைப் பலமாக ஆட்டிவைத்தேன். அப்படியென்றால் தங்கள் தானமளிப்பவர் அடையாள அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை, இதுவரை நான் தானமளித்ததெல்லாம் இந்தியாவில்தான் என்று சொன்னேன். அப்படியென்றால் அது கணக்கில் வராது என்று சொன்னார்கள். கேள்வித்தாளில் “Never Donated Blood” என்று எழுதிக் கொண்டார்கள். இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் “கனேடிய முன் அனுபவம்” தேவை. (அது இல்லாத காரணத்தால் ஒரு முறை லினஸ் டோட்வால்ட்-க்கு Linux System Administrator வேலை மறுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்).

பிறகு விரைவான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நான் இந்தியா (மற்றும் பிற நாடுகளின்) சோதனைகளில் அறிந்திருந்தவகையில் என்னுடைய இரத்தம் பி-குருப் என்றுதான் உறுதி செய்யப்பட்டது. என்னுடைய இரத்தத்துளி காப்பர் சல்பேட் கரைசலில் மிதக்காது முழுகிப்போனபின், முதல்கட்ட சோதனைகள் முடிந்து நான் காத்திருக்கப் பணிக்கப்பட்டேன். கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரக் காஆஆ…த்திருப்பிற்குப் பின், ஒரு நர்ஸ் என்னைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். கேள்விகள் வழக்கமானவைதான். தாங்கள் நல்ல உடல்/மன நிலையில் இருக்கிறீர்களா எனத் தொடங்கி, போதைப் பழக்கம், பச்சைக் குத்தல், ஒருபால்/பலர்பால்/ஒன்றன்பால் சேர்க்கை விருப்பங்கள்/வரலாறுகள் போன்றவை பற்றிய கேள்விகள். கேள்வித்தாள்என்னமோ நான் இதுவரை பார்த்திருந்தவைகளைவிட நீளமானதுதான்.

பிறகு நான் இரத்ததானம் அளிக்க அருகதையில்லாதவன் என்று வருத்தத்துடன் தெரிவிக்கப்பட்டேன். காரணம்: நான் 1980 க்குப் பிறகு மொத்தத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்திருந்தது. பைத்தியப்பசு வியாதியின் எதிரொலிதான் இது. அதாவது, பல நாட்கள் பிரிட்டனிலோ அல்லது பிரான்சிலோ வசித்திருந்தால் என் இரத்ததில் பைத்தியப்பசு வியாதி இருப்பதாக கனேடிய அரசாங்கம் தீர்மானிக்கிறது/சந்தேகப்படுகிறது. பிறப்பிலிருந்து மாமிசங்களை முற்றாகத் தவிர்த்துவரும் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

பைத்தியப்பசு வியாதி தொற்றுவியாதியல்ல. ஆனால், மாறுகாரணி குருட்ஸ்பெல்ட் யாகோப் வியாதி (Variant Creutzfeldt Jakob Disease (vCJD) ) என்று அறியப்படும் அதன் தொடர்பான வியாதி இரத்தத்தால் பரவச் சாத்தியங்கள் இருப்பதாக (சோதனைகள் மூலம் நிருபிக்கப்படவில்லை) கனேடிய அரசாங்கம் நம்புகிறது. ஆனால் குருட்ஸ்பெல்ட் யாகோப் வியாதி 30 வயதுக்கு உட்பட்டவர்களையே பாதிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்தபடியால் எப்படியாவது என்னுடைய இரத்தத்தைத் தானம் செய்துவிட்டு வரலாம் என்று முயற்சித்தேன். பின்வரும் காரணங்களைச் சொல்லி வாதிட்டுப் பார்த்தேன்.

1. நான் பிறவி தாவரபட்சினி
2. நான் மாட்டிறைச்சியை ஒருபோதும் தொட்டதில்லை
3. நான் பிரிட்டனில் இருந்த சமயம் மாட்டுப்பண்ணைகளுக்குச் சென்றதில்லை
4. கு.யா வியாதி – முப்பது வயதுக்கு உட்பட்டவர்களைத்தான் பாதிக்கிறது
5. கு.யா வியாதி இரத்தவழி பரவுதல் சோதனை ரீதியாக நிருபிக்கப்படவில்லை

இல்லை… நர்ஸ் மிகவும் உறுதியாகத்தான் இருந்தார். அவர் இந்த முடிவு ஆட்டாவா-வில் இருக்கும் அரசியல்வாதிகளால் முன்மொழியப்பட்டது என்று சொன்னார். அப்படியானால் அவர்களாக மனமிரங்கி vCJD Deferral என்று அழைக்கப்படும் இந்த மடத்தனத்தை மாற்றியமைக்கும்வரை என்னைப் போன்றவர்கள் இரத்ததானம் அளிப்பது சாத்தியமில்லை.

மிகவும் நீளமான இந்த கேள்வித்தாள் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவரை திருப்பியனுப்புகிறது என்றும், நான் தனியன் அல்லன் என்றும் நர்ஸ் தேற்றத் தொடங்கினார். அப்படியானால், கனடாவில் அவசர இரத்தத் தேவைகளுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் தேவையில் நாலில் ஒருபங்குதான் இரத்த வங்கியில் இருப்பதாகவும், இது அவர்களுக்கு சிரமத்தை உண்டுபண்ணுவதாகவும் வருத்தப்பட்டார். அதைத் தவிர்க்க, தகுதியானவர்களை ஒவ்வொரு 56 நாட்களுக்கும் தானமளிக்க ஊக்குவிப்பதாகச் சொன்னார்.

முகாமிலிருந்து வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்படும் பழரசத்தையும் குக்கிகளையும் தானமளிக்கத் தகுதியற்றவனுக்கு எதற்கு என்று மறுத்தேன். அந்த மாணவி வலிந்து உபசரித்து, “தானமளிக்க்கவிட்டாலும் பரவாயில்லை, முன்வந்த உங்கள் குணத்திற்கு எங்கள் நன்றியாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னாள். 56 நாட்களில் திரும்பவரப்போகும் நண்பருக்காக அவற்றை விட்டுவிட்டு வந்தேன்.

படிக்கும் யாரவது ஒரு கனடாவாசி நிலையுணர்ந்து அடுத்த முகாமிற்குச் சென்றதாகச் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவேன். போவதற்கு முன்னால் தகுதியை உறுதி செய்துகொள்ளவும்.