சும்மா இரும்புப் பெட்டியும் காந்தச் சட்டியுமாக இருந்து கொண்டிருந்த கணினிகளுக்கு உயிர் வந்து இந்த வாரத்தோடு இருபது வருஷங்கள் ஆகியிருக்கின்றன. ·à®ªà¯à®°à¯†à®Ÿà¯ கோஹன் என்பவர் வாக்ஸ் கணினிகளில் சுயபெருக்கம் செய்துகொள்ளும் நிரலியைப் பதித்த பின்பு இன்றைக்கு உலகில் 60,000 க்கும் மேற்பட்ட கணினி வைரஸ்கள் உலவி வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கணக்கு சொல்லுகிறார்கள். மெதுவாக அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு ·à®ªà®¿à®°à¯†à®Ÿà¯ இன்றைக்கு நல்ல பிள்ளையாக இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட பலரும் இதைப் போலத்தான் துஷ்டர்களாக இருந்து இப்பொழுது போலீஸாக மாறியிருக்கிறார்கள். 1986ல் மேசைக் கணினிகளுக்காக (மைக்ரோஸாப்ட் டாஸ் இயக்குதளத்தில்) பாக்கிஸ்தானிய சகோதரர்கள் பாஸிட், அம்ஜத் சகோதரர்களால் எழுதப்பட்டதாக அறியப்படும் (c)Brain வைரஸ்தான் பலரையும் கதிகலங்க அடித்த முதல் கிருமி. 1987ல் (கணினிகள் வலையாகப் பிண்ணப்படாத அந்தக் காலத்தில் கணினி வைரஸ் பரவுவதற்கு அவ்வளவு நாட்கள் ஆகும்) பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் 5.25 அங்குல நெகிழ் வட்டை வைத்துக்கொண்டு “இதில் வைரஸ் இருக்கிறது, உன்னிடம் இதற்கான மாற்று நிரல் இருக்கிறதா”? என்று உயர்த்திக் கேட்பது அந்தஸ்திற்கான அடையாளம். அப்பொழுதுதான் அடியேனுக்கும் வைரஸ் ஆர்வம் தொற்றிக் கொண்டது. (சி)பிரெய்ன் பீடிக்கப்பட்ட வட்டை நார்ட்டன் ஹெக்ஸ் எடிட்டர் என்று சொல்லப்படும் விசேட நிரலி வழியாகப் பார்த்தால், வட்டின் துவக்கப் பிரிவில் இந்த செய்தி வரும்;

Welcome to the Dungeon
(c) 1986 Basit & Amjad (pvt) Ltd.
BRAIN COMPUTER SERVICES
730 NIZAB BLOCK ALLAMA IQBAL TOWN
LAHORE-PAKISTAN
PHONE :430791,443248,280530.
Beware of this VIRUS….
Contact us for vaccination………… $#@%$@!!

அப்படிப்பட்ட வட்டு உங்கள் கையில் இருந்தால் குறைந்த பட்சம் நான்கு ஐந்து பெண்களிடமாவது கடலை போட முடியும். 1993 வாக்கில் என்னிடம் கிட்டத்தட்ட இருநூறு வைரஸ்கள் அடங்கிய வட்டு ஒன்று இருந்தது (அந்த நேரங்களில் நான் ஒரு கடலை உடைக்கும் எந்திரத்தையே நடத்தி வந்தேன் என்பது சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும்). இவற்றில் பல வைரஸ்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும் (பக்தி வேதாந்தா, ஏஜென்ட் ஆரெஞ்ச், மர்லின்,…). (சி)பிரெய்ன் போன்ற சாதுக்களின் செய்தியை நார்ட்டன் எடிட்டரில் மாற்றி “நம்ம ஆளுக்கு” சேதிகூட அனுப்ப முடியும்.

இன்றைக்கு மின்னஞ்சல் மூலம் பரவி, அடுத்த நொடியில் உங்கள் கணினியை முழுவதும் கபளீகரம் செய்து ஏப்பம் விடும் பிளாஸ்டர் கிருமிகளுடன் ஒப்பிட்டால் (சி)பிரெய்ன் பரமசாது. இதை மிக எளிதாக நீக்கிவிட முடியும் (அந்தக் காலத் தொழில்நுட்பச் சிக்கல் அளவிலேயே இது மிகவும் எளிது). இதைத் தடுக்க பலர் பலவிதமான வழிகளைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் என்னுடைய பேராசிரியர் கண்டுபிடித்த முறைக்கு இன்றைக்கும் ஈடு கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

floppy_lock.png ஊடுவலையாக கணினிகள் சேராமல் இருந்த அந்த நாட்களில் வைரஸ் பரவ ஒரே வழி நெகிழ் வட்டுகள்தான். ஒரு கணினியிலிருந்து இன்னொன்றுக்குத் தரவுகளை மாற்ற நெகிழ் வட்டை விட்டால் வேறு வழி கிடையாது. அந்த நிலையில் நெகிழ்வட்டைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தினால் வைரஸிலிருந்து விடுதலை என்று உணர்ந்தார். ஒரு நாள் காலை நாங்கள் ஆய்வகத்திற்கு வந்த பொழுது எங்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கணினியில் பிளாப்பி செருகும் இடத்தில் ஒரு அலுமினியப் பட்டை போடப்பட்டு ஏழு பல் நவ்தால் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. (இந்தத் தீர்வுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தால் அவர் மில்லியனராக ஆயிருப்பார். இல்லாமல் போக இப்பொழுதும் பலர் அமெரிக்காவில் இந்தப் பூட்டுகளை விற்று வருகிறார்கள்:)) ).

கடந்த இருபதாண்டுகளில் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வைரஸ்கள் மிகப் பெரிய பங்காற்றியிருக்கின்றன. பாதுகாப்புத் துறையைத் விழிப்புடன் வைத்திருக்கும் கடமை திருடர்களுக்குத் தானே இருக்கிறது.

மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆதர்ச குணம் அவற்றின் எளிமைதான் என்று சொல்வார்கள். ஐன்ஸ்டைனின் E=mc^2 என்ற சமன்பாட்டைப் புரிந்து கொண்டவர்களின் எண்ணிக்கையைவிட நினைவில் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பல இலட்சம் மடங்கு அதிகம். எளிமைதான் கண்டுபிடிப்பின் உன்னதம் என்றால் ஏழுபல் நவ்தால் பூட்டுக்கு இணையாகக் கணினி பாதுகாப்புத் துறையில் இன்றுவரை ஒரு கண்டுபிடிப்பு தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.