கடந்த இரண்டு நாட்களாக வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் என்பதால் எழுத முடியவில்லை.

* * *

glofish.gif நேற்று ஹாமில்டன் நகரில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நண்பருக்கு என்னுடைய சிறு உதவி தேவைப்பட்டது. வேலை எதிர்பார்த்ததைவிட எளிதாக முடிந்தாலும் நேரமெடுத்தது. இடையில் கிடைத்த நேரத்தில் அந்தப் பேராசிரியருடன் உரையாட முடிந்தது. உரையாடல் சமீபத்தில் மரபு மாற்றப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் ஒளிர்மீன்கள் பற்றித் திரும்பியது. சில நாட்களுக்கு முன்னால் தைவானில் மரபு மாற்றப்பட்ட ஒளிரும் வரிமீன்கள் வீடுகளில் செல்லப்பிராணியாக விற்பனைக்கு வந்தது. இதையட்டிய எனது கருத்தை எழுத மறந்து போனேன். இன்றைக்கு slashdot தளத்தில் இது டெக்ஸாஸில் இருக்கும் ஒரு விற்பனையாளர் மூலமாக அமெரிக்காவில் விற்பனைக்குத் தயார் என்று தெரியவருகிறது. tn_Darer_u1.jpg சாதாரண வரிமீனின் (Zebra Fish) அவதாரம். கடல் அனிமோன் (Sea Anemone) என்று சொல்லப்படும் ஒரு உயிரியில் அதற்கு ஒளிர் தன்மையை அளிக்கும் மரபுக்கூறுகளை ஒட்டி உருவாக்கப்பட்டது இந்த ஒளிர்மீன். எனவே இது ஒரு மரபுமாற்றப்பட்ட உயிரி. பொதுவாக மரபுமாற்றப்பட்ட உணவு வகைகள், விலங்குகள் இவற்றுக்கெல்லாம் இருக்கும் எதிர்ப்பு இந்த மீனுக்கும் தோன்றியிருக்கிறது. முறையாகப் பரிணாம வளர்ச்சியடைந்து உருவாகாமல் ஆய்வகத்தில் மரபு மாற்றப்பட்டு தயாரிக்கப்பட்ட இதனால் சூழலில் என்னென்ன மாறுதல்கள் விளையும் என்று கவலை கொள்கிறார்கள். இதற்குக் காரணம், வரிமீன்கள் வடஅமெரிக்காவின் சூழ்சங்கமத்திற்குச் (ecosphere) சம்பந்தமில்லாதவை. இவை பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வசிப்பவை. இவை உயிர் வாழ 18-24 செல்சியஸ் வெப்பநிலை தேவை. இவற்றை தென்னமிரிக்காவின் கொலம்பியா நாட்டிலும் கண்டிருக்கிறார்கள், என்றாலும், அதற்குக் காரணம் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு நீர்நிலைகளில் விடப்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இப்படி சூழ்சங்கமத்திற்குத் தொடர்பில்லாதா பிராணிகளை அறிமுகம் செய்வதால் மூன்றுவிதமான விளைவுகள் ஏற்படலாம். (1)அறிமுகப்படுத்தப்படும் உயிரினம் சூழலுடன் ஒத்துப் போகமுடியாமல் அழிந்து போகலாம். (2) சூழலுடன் போராடி, இயைந்து பிற உயிரினங்களுடன் பரஸ்பர கூடிவாழ்தல் சாத்தியமாகி ஒன்றிப் போகலாம். (3) அறிமுகப்படுத்தப்படும் உயிரினம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் பட்சத்தில் வந்த இடத்தை துவம்சம் செய்து அந்தச் சூழலில் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணலாம். இதில் முதலாவது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் வசிக்கும் டொராண்டோவில் ஈழத்தமிழர்கள் பெருமுயற்சியாக வாழைமரம் முதல் அருகம்புல்வரை முயன்று வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலானவற்றில் தோல்விதான். இரண்டாம் வகை – எல்லோருக்கும் நல்லது. இப்படித்தான் இந்தியர்களுக்கு தக்காளி, உருளைக்கிழங்கு (இது இந்தியாவில் தோற்றுப் போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் :)), காப்பி, காலிபிளவர், இன்னபிற பயிரினங்கள் இந்தியர்களுக்குக் கிடைத்தன.

beetle.jpg மூன்றாவதுதான் மிகவும் முக்கியமானது. டொராண்டோவில் எங்கள் வீடு இருக்கும் நார்த் யார்க் பகுதியில் இந்த வருடம் ஆசிய நீள்கொம்பு வண்டுகள் அதிகமாகப் பரவியிருக்கிறன. இது கனடாவின் தேசிய மரமான மேப்பிள் மரங்களில் பொந்துகளை உண்டாக்கி அவற்றைத் துளைத்து அழிக்கிறது. எங்கள் சுற்று வட்டாரத்தில் ஆயிரம் மரங்களை நாளை வெட்டுவதாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இவற்றில் இருக்கும் வண்டுகளின் முட்டைகள் பொரித்து அடுத்த வருடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழியும் என்று அஞ்சுகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த வண்டுகளால் வருடாந்தர இலையுதிர் கால தெரு சுத்திகரிப்பு நின்று போனது. இந்த வண்டுகள் வட அமெரிக்காவிற்குச் சம்மந்தமில்லாதவை என்றும் இவை ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்கா வழியாகப் பரவியவை என்று நம்பப்படுகிறது.

இதன் இன்னொரு முகமும் உண்டு. நான் சிறுவனாக இருந்த பொழுது கும்பகோணம் சுற்று வட்டாரங்களில் பலவகையான வாழைப்பழங்கள் கிடைக்கும். சராசரியாக எல்லா இடங்களிலும் விற்கும் பூவன்பழம், சமைக்க மட்டுமே ஏற்ற மொந்தன்பழம், தனியான சுவை கொண்ட கற்பூரவள்ளி, துக்கிணியூண்டு இருக்கும் சிறுமலைப்பழம். இன்னும், செவ்வாழை, தேன்கதலி, நேந்திரம், பச்சைநாடன், பேயன், என்று பல வகை வாழைப்பழங்கள் கிடைக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு, உதாரணமாக கற்பூரவள்ளி வாழையின் பூ சமையலுக்கு நன்றாக இருக்காது, இன்னொரு வாழையின் தண்டு மிகவும் ருசியாக இருக்கும். இப்படி வகைவகையாக இருந்த ஊரில் இப்பொழுது அங்கிங்கெனாதபடி சர்வவியாபியாக மொரிஷியஸ் ரொபஸ்டா என்ற வாழைப்பழம்தான். பஞ்சாமிருதத்தில் பிசையப்படுவதிலிருந்து பாட்டரிக்கட்டைகளுடன் ஊறப்போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவதுவரை புள்ளிபோட்ட ரொபஸ்டாதான் வாழைப்பழம் என்றாகி வருகிறது. இது தீவிர ஒட்டு இரகம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னால் கும்பகோணத்தில் ரொபஸ்டா கிடையாது. ஊடுபயிராக ரொபஸ்டாவையும், சிறுமலைப் பழத்தையும் விளைவித்தால் எந்தவிதமான மாறுதலும் இல்லை. என்றாலும், ரொபஸ்டா குறுகிய காலத்தில் விளைச்சல் தந்து, வெள்ளம், பூச்சி இவற்றால் பாதிக்கப்படாமல் கட்டாயம் பலனைத் தருவதால் விவசாயிகள் மலைப்பழத்தின் ருசியை மறந்து போகிறார்கள். இப்படி பொருளாதாரக் காரணிகளும் சில சமயம் அறிமுகத் தாவரங்களையும், விலங்குகளையும் மனிதன் தீவிரமாகப் பெருக்க வழியிருக்கிறது.

இந்த நிலையில், இருட்டில் ஒளிரும் மீன்கள் தவறுதலாகவோ அல்லது மனிதனின் எத்தனத்தாலோ நீர்நிலைகளில் கலந்துப்போய் பிற மீன்களை அழிக்கும் சாத்தியம் இருக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். இதை ஒளிர்மீன் வியாபாரிகள் மறுக்கிறார்கள். வெப்ப நாடுகளில் மாத்திரமே உயிர்வாழும் இந்த மீன்கள் வளர்ப்பில் இல்லாமல் வட அமெரிக்காவின் நீர் நிலைகளில் விடப்பட்டால் குளிரில் இறந்துபோய்விடும் என்று சொல்கிறார்கள். ஆனால், இதே வியாபாரிகள் சில நாட்கள் கழித்து வாங்கிப் போகும் வாடிக்கையாளர்கள் அதிக நாள் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள் என்று காரணம் காட்டி இவற்றை குளிர் நீரில் வளருவதற்கு ஏற்றதாக ஆக்குவார்கள் (அப்படியில்லாவிட்டால் அந்த மீனே சூழலுடன் மோதி, சூழலுக்கு ஏற்றபடி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும், ஆனால் அதற்கு வருடங்கள் பல ஆகலாம்). இப்படி அந்த மீன் மெதுவாக வட அமெரிக்க சூழலில் சங்கமிக்கும்.

* * *

முதன் முறையாக ஒரு பிராணி செல்லமாக வளர்ப்பதற்காக மரபு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சூழல் கவலையெல்லாம் ஒரு புறமிருக்க இது மரபியல் ஆய்வு முதிர்ச்சியடைந்ததன் அடையாளம்.

ஏனென்றால் மனிதனின் பொழுதுபோக்குக்காக அறிவியல் பயன்படும் பொழுதுதான் அது முதிர்ச்சியடைகிறது.

இதைப்பற்றி தொடர்ந்து…