குருண்டிக், சோனி, பானாஸோனிக், ஷார்ப், டெக்ஸாஸ் இன்ஸ்ருமென்ட்ஸ் உள்ளிட்ட எட்டு மாபெரும் நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Home Audio Video Interoperability (HAVi) protocol ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு சாதனங்கள் தயாரிப்பாளர்களால் அவர்களின் வேறுபட்ட தயாரிப்புகள் ஒன்றிணைந்து இயங்க வழிவகுக்கும். உதாரணமாக, என்னுடைய வீட்டில், தொஷீபா தொலைக்காட்சி, பானஸோனிக் இல்லரங்கு (home theatre), JVC ஒலிக்கருவி இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. சில சமயங்களில் இவற்றுடன் நான் என்னுடைய மடிக்கணினியை இணைப்பதும் உண்டு (MP3 பாடல்களை சக்திவாய்ந்த இல்லரங்கில் கேட்க). இதுபோல பலர் வீடுகளில் பலவாறான மின்னணுச் சாதங்கள் பிணைக்கப்பட்டுச் செயல்படுகின்றன. இவற்றின் பின்னால் சென்று பார்த்தால் இருக்கும் கம்பி இணைப்புகள் மிகவும் குழப்பமாக இருக்கும். இதுதவிர இல்லரங்குச் சாதனம் போன்றவற்றில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கும். இவற்றை முறையாகச் இணைப்பதும் சரியான முறையில் பாவிப்பதும் சிக்கலான ஒன்று. பலர் சக்திவாய்ந்த மின்னணுச் சாதனங்களை அதிக விலை கொடுத்துவாங்கி முறையாகப் பாவிக்கத் தெரியாமல் வெறும் அலங்காரச் சாதனமாக இருத்தியிருப்பார்கள். மேலும் இவற்றையெல்லாம் இயக்க ஒன்றொன்றுக்கும் தனித்தனி தொலையியக்கிகளும் தேவை.

வரவிருக்கும் HAVi-Compliant சாதனங்கள் FireWire என்று அழைக்கப்படும் IEEE1394 இணைப்புகளைக் கொண்டிருக்கும். சாதனங்கள் HAVi நடைவரை (protocol)யைப் பயன்படுத்துவதால் அவற்றால் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ள முடியும். எனவே, உங்கள் இல்லரங்கிலிருது இருபது சோடி இணைப்புகள் தேவையாக இருக்காது. ஒரே ஒரு 1394 கம்பி அதற்கு அடுத்த சாதனத்துடன் அதனை இணைக்கும். இதனால் அணைத்து சாதனங்களையும் ஒருமித்த வகையில் (ஒரே தொலையியக்கி கொண்டு) இயக்க முடியும். விரைவிலேயே, இந்தத் தயாரிப்பாளர்களின் அணைத்து கருவிகளும் ஒன்றுடன் ஒன்று இணைய முடியும். திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது உங்கள் வாசல் கதவை ஒருவர் தட்டினால், அது திரைப்படத்தைத் உறையவைத்து விட்டு, வீட்டுக்கு வெளியே இருக்கும் பாதுகாப்பு காமெராவைத் தொலைக்காட்சிக்கு இணைக்கும். இரு வேறு சாதனங்களை எந்தவிதக் குழப்பமும் தயக்கமும் இல்லாமல் ஒருசேரப் பாவிக்க முடியும்.

இவ்வாறான இல்லவலையமைப்பில் உங்கள் கணினியும் இணைந்து கொள்ளும். எனவே, உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படங்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியும்; MP3 இசையை வரவேற்பரை ஒலிப்பெருக்கியில் கேட்கமுடியும்.

எல்லா தொழில்நுட்பச் சாதனங்களையும் போல இதற்கும் முக்கிய எதிர்ப்பும் இருக்கும். உதாரணமாக, இவ்வாறு சாதனங்கள் இணைக்கப்பட்டால் தொலைக்காட்சியில் வரும் டிஜிட்டல் திரைப்படத்தை, DVD recorderல் துல்லியமாக டிஜிட்டல் பதிவு செய்ய முடியும். இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தூக்கம் போக்கக்கூடும். MP3 பிரபலமாவதற்கு முன்னரே, சோனி Adapttive TRansform Acoustic Coding (ATRAC ) எனும் நடைவரையைத் தயாரித்து, என்றாலும், ATRAC பயன்படுத்தும் சோனியின் MiniDisc சாதனத்தில் பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் பாடல்களை மீண்டும் டிஜிட்டல் முறையில் பிற சாதனங்களில் (உதாரணமாக கணினியில் அல்லது CD Writerல்) நகலெடுக்க முடியாது. இவ்வாறு கட்டுப்படுத்த முக்கிய காரணம், ATRAC அளவுக்குறைப்பு நடைவரையைக் கண்டுபிடித்த சோனியின் முக்கிய வியாபாரங்களில் ஒன்று இசைத்தட்டு விற்பனை. துல்லியமான நகலாக்கம் அனுமதிக்கப்பட்டால் சோனியின் minidisc வியாபாரம் பெருகும், ஆனால் சோனியின் தயாரிப்பில் வெளிவரும் புது இசைத்தட்டுகளின் வியாபாரம் குறையும். சோனியின் கணக்குப்படி நாளாவட்டத்தில் அதற்கு இலாபத்தைவிட நஷ்டமே அதிகம். எனவே, அதனுடைய கண்டுபிடிப்பையே அது குறைப்பிரசவமாக்கித்தான் வெளியிட்டது. இது நடப்பின் சோகமான உண்மை.

இப்படி இசைவணிகர்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி HAVi சாதனங்கள் பெருகினால் அது சராசரி நுகர்வோருக்குத்தான் நன்மை. எனக்கென்னவோ, அணைத்துச் சாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் அது உங்கள் வீட்டில் திரைப்படம் ஓடும்பொழுது உங்கள் MP3-playerஐச் செயலிழக்கச் செய்யுமாறுதான் அமைக்கப்படும் என்று தோன்றுகிறது, இதன்மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பாடலை மாத்திரம் திரும்பக் கேட்கப் பதிவு செய்துகொள்ளூம் உரிமையும், திறமையும் உங்களிடமிருந்து பறிக்கப்படும்.

வழக்கமான முத்தாய்ப்புத்தான் – காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

* * *
Protocol – நடைமுறைக்கு வரையறை எனவே நடைவரை என அழைக்கலாம்.

* * *
சென்ற வாரம் எழுதிய MP3 is no Sin கருத்தின் எதிர்வினைக்கும், மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தேவை/தேவையின்மை பற்றி விரைவில் பதில் எழுதுகிறேன்.

* * *