இன்றைக்கு கூகிளின் ஐந்தாவது பிறந்த நாள். இது தெரியாமல் கடந்த நான்கு நாட்களாக நான் கூகிளைப் பற்றி வலைப்பதிந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!!

* * *
என் மூக்கு
டக்ளஸ் ஆடம்ஸ்

என்னுடைய அம்மாவிற்கு நீளமூக்கு, என்னுடைய அப்பாவிற்கு அகலமூக்கு. நான் இரண்டையும் ஒருசேரப் பெற்றுக்கொண்டேன். இது பெரியது. எனக்குத் தெரிந்தவரையில் இதை விடப் பெரிய மூக்கு கொண்ட ஒரே ஆள் என்னுடைய பள்ளியின் மாஸ்டர்; மிகச்சிறு கண்களையும், இல்லாததுபோல் தோற்றமளிக்கும் சிறிய தாடையையும் கொண்ட, கேவலமான ஒல்லிக் குச்சி. ஒரு பிளமிங்கோ பறவைக்கும் பழைய உழவு கருவிக்கும் பிறந்தவர்போல் இருப்பார். குறுக்காகக் காற்றடிக்கும் பொழுது தளும்பி நடப்பார். அவரிடம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் பல.

எனக்கும் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைதான். இரக்கமின்றி என்னுடைய மூக்கைப் பற்றி பலமுறை கேலி செய்யப்பட்டிருக்கிறேன், ஒரு நாள் மூலையில் இரண்டு கண்ணாடிகளுக்கிடையில் நான் அதைப் பார்க்கும் வரை. ஒத்துக்கொள்ள வேண்டும், அது மெய்யாகவே கேலிக்குறியதாகத் தான் இருந்தது. அந்த நிமிடம் தொடங்கி என் மூக்கைக் கேலி செய்வதை எல்லோரும் நிறுத்திவிட்டனர். அதற்குப் பதிலாக நான் அடிக்கடி “மெய்யாகவே” என்ற வார்த்தையை பிரயோகிப்பதைக் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். இன்றுவரை என்னால் அதை விடமுடியவில்லை.

douglas_adams.jpg என்னுடைய மூக்கைப் பற்றிய இன்னொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் அது காற்றை உள்ளே விடுவதே இல்லை. இது புரிந்துகொள்ள, ஏன் நம்பக்கூட கடினமான விஷயம். இந்தப் பிரச்சனை நெடுங்காலத்திற்கு முன் நான் என்னுடைய பாட்டிவிட்டில் வசித்தபோது தொடங்கியது. என்னுடைய பாட்டி உள்ளூர் விலங்குகள் வதைத் தடுப்புக் கழகத்தில் இருந்தார். அப்படியென்றால் வீட்டில் மோசமாகப் பழுதடைந்த நாய்கள், பூனைகளுக்குப் பஞ்சமில்லைதானே. கூடவே சமயங்களில் கீரி, புறா, இன்னபிறவும் உண்டு.

சில உடலால் காயம்பட்டவை, சிலவற்றின் மனது புண்ணாக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவற்றின் தாக்கம் என் மீது அதிகமாகவே இருந்தது; என்னுடைய கவனம் ஒன்றின்மீது நிலைக்காமல் போக்கடிக்கப்பட்டது. காற்றில் எப்பொழுதும் மாசும் மயிரும் மிதந்தபடியே இருந்ததால் என்னுடைய மூக்குச் சவ்வு வீங்கியபடியே இருக்கும், மூக்கு ஒழுகியபடியே. பதினைந்து நொடிகளுக்கு ஒருமுறை நான் தும்மியபடியே இருப்பேன். எதாவது ஒரு விஷயத்தின் மீது என்னால் பதினைந்து நொடிகளுக்குள் பார்த்து, உணர்ந்து, பகுத்தறிந்து, தீர்மானிக்க முடியவில்லை என்றால் அது என்னுடைய மண்டையிலிருந்து (தும்மலுடன்) தூக்கியெறியப்படும், நிறைய சளியுடன் கூடவே.

சிலர் நான் அளவுக்கதிகமாக ஒற்றைவரியிலேயே யோசித்து, ஒற்றைவரி வாசகங்களை மொழிகிறேன் என்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டில் ஏதாவது உண்மையிருக்குமானால், அந்தப் பழக்கம் என்னுடைய பாட்டியின் வீட்டிலிருந்து துவங்கியது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பாட்டி வீட்டிலிருந்து தப்பித்து விடுதிப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன் அங்குதான் என் வாழ்வில் முதன் முறையாக சுவாசிக்க முடிந்தது. புதிதாகக் கிடைத்த இந்த விடுதலை இரண்டு வாரங்களுக்குத்தான் நீடித்தது, நான் ரக்பி விளையாட்டைக் கற்றுக்கொள்ளும் வரை. மொத்தத்தில் விளையாடிய பத்து நிமிடங்களுக்குள்ளே என்னுடைய மூக்கையும் முழங்காலையும் உடைத்துக் கொண்டேன். மிக உன்னதமான இந்த சாதனையால் நிரந்தர புவியியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. நான் இந்த உலகிலிருந்து தனியன் ஆக்கப்பட்டேன்.

பல காது, மூக்கு தொண்டை நிபுணர்கள் பல்வேறு சமயங்களில் என்னுடைய நாசித்துவாரங்களில் பயணித்திருக்கிறார்கள். சொல்லிவைத்தார்போல் எல்லோரும் ஆச்சரியத்துடன்தான் வெளிவருவார்கள். கண்டவர் விண்டிலர். அப்படி ஆச்சரியத்துடன் வெளியே வராதவர்கள் – வெளியே வரவே இல்லை. எனவே அவர்கள் இப்பொழுது என்னுடைய பிரச்சினையின் அங்கமாக ஐக்கியமாகிவிட்டார்கள்.

நாசியின் உள்சதைகளை அறுத்துவிடும் என்ற கடினமான எச்சரிக்கைதான் என்னை கொகெய்ன் எடுத்துக்கொள்ள தூண்டிய ஒரே காரணம். அப்படி கொக்கெய்ன் என்னுடைய சதைகளைத் திண்றுவிடும் என்றால் நான் சந்தோஷமாக வாளிவாளியாக அதை என் பீரங்கி மூக்கினுள்ளே கிட்டித்திருப்பேன். ஆனால் நான் அப்படிச் செய்யாமல் போனதன் ஒரே காரணம் – அப்படிச் செய்த என்னுடைய நண்பர்களின் கவனம் பொருள்களின் மீது நிலைத்த நேரம் என்னுடையதைவிடக் குறைவு என்பதுதான்.

எனவே இப்பொழுது என்னுடைய முகத்தில் மூக்கு இருப்பது அலங்காரத்திற்காகத்தான்; எந்தவிதமான பயன்கருதியும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஹப்பிள் தொலைநோக்கியைப் போல அது ஒரு அதிஉன்னத தொழில்நுட்ப சாதனை. அதைப்போலவே இதற்கும் எந்தவிதமான பயனும் இல்லை; சில சில்லரை நகைச்சுவைகளில் பாத்திரமாவைத் தவிர.

{
இது டக்ளஸ் ஆடமின் கடைசிப் புத்தகமான The Salmon of Doubt-ல் இருக்கும் ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இது முதலில் 1991 கோடையில் Esquire-ல் வெளிவந்தது. ஆடம்ஸ் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர். அறிவியல் புனைகதையில் அங்கதத்தைத் திறம்பட சாதித்த சிலருள் முதன்மையானவர்.

டக்ளஸ் ஆடம்ஸ் The Hitchhikers Gyide to the Galaxy எனும் தொடரின் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்படும், வானொலி நாடக, புத்தக, தொலைக்காட்சித் தொடர், கணினி விளையாட்டு, மேடை நாடக, சித்திரக்கதை, குளியல் துண்டு வடிவங்களை ஆக்கியவர். இருபது வருடங்களுக்கு மேலாக வெளிவந்து விடுவதாகப் பயமுறுத்திக்கொண்டிருக்கும் இதன் திரைப்பட வடிவம் அடுத்த நூற்றாண்டில் எந்த நொடியிலும் வந்துவிடலாம். என்னைப்போன்ற இரசிகர்களால் தொழப்படும் அவர், மே 11, 2001ல் அகால மரணமடைந்தார் என்று மற்றவர்கள் நம்பிக் கொண்டிருக்க, நான் ஆல்பா சென்டாவ்ரி பேரண்டத்தில் அடுத்த வரப்போகும் விமானக்கப்பலை நிறுத்த துண்டை ஆட்டிக்கொண்டு நிற்கிறார் என நம்புகிறேன். ஏனென்றால், அந்த எழுத்துக்கு அழிவே கிடையாது.
}

The Salmon of Doubt, Hitchhiking the Galaxy One Last Time, Douglas Adams, Forword by Stephen Fry, Pan MacMillon, 2002.