(சம்பவங்கள் சற்றும் கலப்பில்லாத அக்மார்க் சரித்திரப் பதிவு)

கும்மோணம் காவேரிக் கரை, டபீர் கீழத்தெரு-பிள்ளையார் கோவில் தெரு இவற்றுக்கிடையே உள்ள சந்தியைத் தவிர உள்ளூரில் அதிகம் தெரியாத, அரசாங்கப் பள்ளிக்கூடத்து வாத்தியரின் மூன்றாவது மகன், கிளாஸில் ரேங்க் தவறிப் போனால் மூலையில் உட்கார்ந்து அழும், தெரு கிரிக்கெட் டீமில் ஏழாவது டவுன் பாட்டிங், எப்பவாவது ஆ·à®ªà¯ பிரேக் பவுலிங், என்று வாழ்ந்த பத்தொன்பது வயது விடலைச் சிறுவனுக்கு, நினைவில் வைத்திருந்து எழுதத்தக்க என்ன அனுபவங்கள் நேரும்?

1. ப்ராப்பர்டீஸ் ஆப் மேட்டர் அசைன்மென்ட் எழுத வேண்டும் என்று முதல் வேண்டுகோள் விடுத்தவுடனே, இந்த தடவை ரேஷன் கடைக்கு நீ போக வேண்டாம், நானே போய்க்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, தம்பதி சமேதராகக் கிடைக்கும் பாமாயில்-கிருஷ்ணாயிலை அம்மா வாங்கி வருவாள், இடைப்பட்ட அந்த நேரத்தில் நடேச ஐயர் டிராபியில் உடுமலை வெங்கடேஸ்வரா பேப்பர் போர்ட் பேட்டிங்கைப் பார்த்து வரலாம்.

2. அடுத்த வீட்டுப் பையனுடன் திருட்டுத்தனமாக தூமம், நளினியின் இன்ப இரவுகள் என்பதைப் போலப் பெயரிடப்பட்ட செல்வம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு வரும் மலையாளப் படங்களில் ஏதாவது ஒன்றுக்கு அரங்கேற்றம் நடக்கலாம்.

3. கவுர்மெண்ட் காலேஜில் கூடப்படிக்கும் அன்பரசன் விடுதி ரூமுக்குப் போய் பின்-கொண்டு கடையில் தொங்கும் புத்தகங்களைக் கண் விரியப் படிக்கலாம்.

4. நாலாவது ஆத்துப் பெண் தைரியமாக எங்கள் ஆத்துக் கொலுவில் வந்து “ராகவனே ரமணா” பாடலாம்.

இது போன்ற விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என் வசந்த காலத்தில். ஆனால் இதற்குப் பதிலாக வேறொன்று நடந்தது.

என்னைத் தேடி சிஐடி போலிஸ் வந்தது.

அந்த அசந்தர்ப்பம் பார்த்தா நான் நண்பன் வீட்டுக்குப் போய்த் தொலைய வேண்டும். என்னைத் தேடிக் கண்டுபிடிக்க முப்பது நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. அண்ணா, உங்கள சார்-மாமா (என் அப்பா) கையோட அழச்சுண்டு வரச் சொன்னார், ரொம்ப முக்யமாம்”. சைக்கிளை இரவல் வாங்கி கேரியரில் பொடியனை உட்கார்த்தி வைத்துக் காமட்சி ஜோசியர் தெருவிலிருந்து பிள்ளையார் கோவில் வந்து சேர்வதற்குள் பல்ஸ் எகிரிப் போயிருந்தது. காரணம், பக்கத்து வீட்டுப் பொடியன் பலராமன் வார்த்தைகளில் “அண்ணா, அவர் போலீஸாம் ஆனா காக்கி சட்ட போடல, மீசை வச்சுருக்கார், அவர் வர்ரச்சே கைல உங்களுக்கு வருமோல்யோ பெரிய பெரிய பாரின் கவர் அதை மாதிரி நாலைஞ்சு வச்சிருந்தார், அது கூட உங்களுக்குத்தான், பேர் போட்ருக்கு, பாத்தேன்”.

வழக்கமாக ஒவ்வொரு இருப்பதி எட்டு அடிக்கும் ஒரு கோவில் இருக்கும் கும்பகோணத்தில், கா.ஜோ. தெருவிலிருந்து. பி.கோ. தெருவரை, தைரியம் சொல்ல இடைவழியில் தெய்வங்களே இல்லாமல் போய்விட்டார்கள். மடத்துத் தெருவிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் பகவத் வினாயகர் கூடக் கடையை மூடிக்கொண்டு விட்டார். தெருவில் நுழைந்தவுடன், 18ஆம் நம்பர் வீட்டு சுந்தரேசன் “என்னடா, அம்பி ஆத்துல போலிஸ் வந்து நோக்கு காத்திண்டுருக்கு நீ இங்க என்ன திரியரே?” என்று கடைவாயில் புகையிலைச் சாறைத் துடைத்துக் கொள்கிறது. அப்படியே வேகமாக மிதிக்கையில் எட்டுக்குடியார், இஞ்சிக்கொல்லை தாத்தா, மிருதங்கம் கணேசய்யர் என்று பி.கோ. தெருவே வாசலில் நின்று கொண்டிருக்கிறது. இன்னதென்றே விபரம் புரியாமல் அகப்படுக்கொண்ட திருடனைப் போல அடியேன்.

வீட்டிற்குள் நுழைந்தால், காக்கிசட்டை போடாத, மீசை வைத்த, மடியில் ரேடியோ பெய்ஜிங் கவருடன் யாராகவும் இருக்கக்கூடிய சராசரி அவர், ஆனால் மனசு கட்டாயம் இவர் போலீஸ்தான் என்று சொல்கிறது. கையில் அம்மா போட்ட காப்பி. “வாங்க தம்பி, நீங்கதான் வெங்கட்ராமனா?”

(…2)