{கும்பகோணத்தில் “தட் பாவம் கைன்ட் ஆ·à®ªà¯ கை யார்” என்று தற்கால (பாய்ஸ் திரைப்பட நாயகியரை ஒத்த) பெண்டிர் வர்ணிக்கத்தக்க ஒரு நான்-டிஸ்கிரிப்ட் விடலையின் வீட்டிற்கு அசந்தர்ப்பமாக வந்த சிஐடி போலீஸ்காரர் அவனைப் பார்த்து “வாங்க தம்பி, நீங்கதான் வெங்கட்ராமனா?” என்று கரிசனமாகக் கேட்டார்}

“இல்லீங்க எம் பேரு வெங்கட்ரமணன்” அடியேன்.

“டேய், துக்கிரித்தனமா எதித்துப் பேசாம அவர் கேக்கறதைச் சொல்லேண்டா. வந்ததுலேந்து ஒன்னுமே சொல்லமாட்டேங்கறார், பக் பக்ங்குகறது. என்ன பண்ணி தொலைச்சியியோ” – அடியேனின் மரபணுக்களில் தோராயமாகக் கால்பங்குக்குச் சொந்தக்காரப் பாட்டி.

“சரி தம்பி, நீங்கதான்னு தெரியுது. கொஞ்சம் உக்காருங்க பேசனும்” – மீசையில்லா இரகசிய போலீஸ்.

(சார் நீங்க யாருன்னு கேட்க மனசு துடித்தது. பாட்டியை அதற்கு மேல் எதிர்கொள்ள திராணியின்றி அதைத் தொண்டையிலேயே முழுகடிக்கிறேன்).

“பரவாயில்ல சார், நான் நின்னுக்கிட்டே இருக்கேன்.”

“ஒன்னும் இல்ல தம்பி. உங்களுக்கு அடிக்கடி பாரின் மெயிலெல்லாம் வருதுல்ல அதைப் பத்தி கொஞ்சம் விசாரிக்கலாமுன்னு”.

வேறு ஒருவர் வேறு சந்தர்ப்பத்தில் இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் அடியேனின் ஈகோ ஊதிப் பருப்பிக்கப்பட்டு உச்சாணிக்கிளையில் ஏறிக்கொள்ளும். சாதாரணமாக இந்தக் கேள்விக்கு அடியேனின் பதில் “நான் ஒரு டி.எக்ஸர். டி.எக்ஸ்-ங்கற வார்த்தையை அவ்வளவு சீக்கிரமாக விளக்கமுடியாது. இதுக்கு நேரடி விரிவு எல்லாம் கிடையாது. இது ஒரு அப்பிரிவியேஷன் இல்ல, ஒரு ஸ்லாங், ஒரு …. அதுனால எனக்கு பாரின்லேந்து மெயிலெல்லாம் வரும். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பத்துப் பதினைஞ்சு. இந்திரா காந்தி செத்துப் போனாருல்ல, அதுக்கு அடுத்த வாரம் எனக்கு ஒரே நாள்ல இருபத்தியேழு லெட்டர் வந்துச்சு, அதுதான் மேக்ஸிமம்” என்று பதில் கிடைக்கும். தோதாகப் பவுன்சர் போட்டால் ஆறு இல்லை, டீப் மிட் விக்கட்டில் ஒரு நாலாவது அடிக்க வேண்டாமா?

ஆனால் அந்த சமயத்தில் ஏனோ பதில் அவ்வளவு சரியா வரவில்லை. தொண்டை கரகரக்கிறது. நமக்குத் தெரியாதவங்க யாராவது எதாவது மெயில் அனுப்பியிருப்பாங்களோ (முதல் முறையாக வாழ்க்கையில் ஸ்பாமுக்கு பயந்த நேரம் அது, உங்களில் யாராவது அப்படி கன்னி கழிந்த ஸ்பாமை நினைவில் வைத்திருக்கிறீர்களா?).

“சார்,… நான் ரேடியோ ஸ்டேஷன் ல்லாம் கேப்பேன். லெட்டர் போடுவேன், அங்கேந்து பதில் வரும். அதுதான்”

“அதில்லை தம்பி, உங்களுக்கு நெறையா பாரின் லெட்டர் வருதே?”

“ஆமாம் சார், சில நாளைக்கு நாலஞ்சு வரும்”

“அதுப்பத்திதான் தம்பி, எந்த ஊர்லேந்தெல்லாம் உங்களுக்கு லெட்டர் வரும்?”

“நெறையா நாட்டுலேந்து சார். ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்சு, ஸ்வீடன்,…”

அதுவரை வாய் வார்த்தையாய் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த ஆசாமி. படாரென்று தொடையிலிருந்து என் பெயரிடப்பட்ட கவர்கள் இரண்டுக்கு அடியில் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுக்கிறார். அதில் ஜெர்மனி, அமெரிக்கா… எழுதிக் கொள்கிறார். அந்தப் பக்கத்தின் மேல் வரியில் என்னுடைய பெயரும் (வெங்கட்ராமன், என்று வழக்கம்போல் தவறாக) முகவரியும் இருக்கிறது. தேதி எழுதப்பட்டிருக்கிறது. நின்ற நிலையில் இருக்கும் என்னால் நன்றாகப் படிக்க முடிகிறது.

நோட்டுப் புத்தகத்தில் அவர் எழுத ஆரம்பித்தவுடன் கொஞ்சம் நஞ்சம் இருந்த தைரியம் எல்லாம் அறவே விட்டுப்போய்விடுகிறது. இரண்டு காலில் நின்றிருந்தவன் ஒற்றைக்காலுக்கு மாறிக் கொள்கிறேன். “தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே, கார்த்யாயனாய விக்மஹே, அருளடு பெருநிலமளிக்கு, நலந்தரும் சொல்லை, என்று எல்லா தெய்வங்களையும் தப்புத்தப்பாகவும், அரைகுறையாகவும் துணைக்கு அழைக்கத் தொடங்குகிறேன்.

“வேற என்ன கன்ட்ரி, தம்பி?”

“நெறயா உண்டு சார். நெதர்லாந்து, பெல்ஜியம், பிபிஸி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, பிரேசில், குவாம்-ன்னு பசிபிக் ஓஷன்ல ஒரு தீவு, சிங்கப்பூர்”.

“வேற என்ன உண்டுப்பா?”

“ஆமாம் சார் இன்னும் இருக்குங்க. நார்வே, சோவியத் யூனியன், ஈஸ்டு ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அப்புறம் அமெரிக்காவுல WYFR ந்னு ஒரு இவாஞ்சலிக்கல் ஸ்டேஷன்.”

“சைனா, இக்குவடார், தைவான், சவுத் ஆப்பிரிக்கா உட்டுட்டீங்களே தம்பி”

“ஆமாம் சார் அங்கெந்தெல்லாம் கூட வரும்”. சொன்னவுடன் அவர் முகத்தில் ஒரு களை தென்படுகிறது.

“என்னென்ன வரும்?”

“QSL கார்டு சார்”

“அப்படீன்னா?”

” நாங்க ரேடியோ ஸ்டேஷன் கேப்போம், கேட்டுட்டு ரிப்போர்ட் எழுதுவோம், சிக்னல் ஸ்ட்ரெங்க்த், நாய்ஸ்-ல்லாம் பத்தி. அதுக்கு வெரிபிகேஷனா அவுங்க கார்டு அனுப்புவாங்க சார்”

“அப்புறம் வேறென்னங்க வரும்?”

“சில சமயம் கிப்ட்-ல்லாம் அனுப்புவாங்க சார், சும்மா சின்னச் சின்னதா, சில சமயம், ஸ்டாம்பு, பர்ஸ்ட் டே கவர், பென்னன்ட், பேனா அப்பிடின்னு”

“பாரின்லேந்து பணம் வருமா?”

“ஆமாம் சார், ஒரே ஒரு தடவ வந்தது. பிபிஸில. லண்டன் ராயல்ன்னு ஒரு சீரியல் டிராமா போட்டாங்க சார், அதுக்கு விமர்சனம் எழுதினத்துக்காக இருபது பவுண்ட் செக் அனுப்பினாங்க”

“வேற?”

“இல்ல சார் பணம் அது ஒன்னுதான் வந்திச்சு”

அந்த சமயத்தில் வாசல் திண்ணையில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அண்டை அயலார்கள் கூடியிருப்பதைப் பார்க்க முடிகிறது. சிலர் நடைவழியில் நின்று கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“தம்பி, நேரடியா விஷயத்துக்கு வர்ரேன். நீங்க… கம்யூனிஸ்டா, நக்ஸலைட் தொடர்பு உண்டா”

தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட கண்ணில் நீர் முட்ட அழுகை வருகிறது. அம்மாவின் முகத்தில் இருக்கும் அசாத்திய பீதி இன்னும் அதைரியத்தை அதிகரிக்கிறது.

(…3)