இன்றைக்கு வலைப்பூக்கள் சஞ்சிகையில் ஈழத்தமிழ் புரியாமல்போதல் குறித்த விவாதங்களை வெட்டித் தொகுத்துக் கிடைக்கப் படித்தேன். இந்த விவாதங்கள் எங்கே நிகழ்ந்தன என்று தெரியவில்லை. எனவே, இவற்றின் முழுவீச்சும் தெரியாது. நான் சொல்லும் கருத்துக்களெல்லாம் வெட்டியொட்டப்பட்டவற்றின் அடிப்படையிலேயே என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

வாதம் இப்படியாகத் துவங்கியிருக்கிறது; ஒரு குழுமத்தில் இலங்கைத் தமிழுக்கென்று அகராதி எதுவும் இருக்கிறதா என்று ஒருவர் கேட்கப் போக “அஃதென்ன ஈழத்தமிழென்றால் இளக்காரமா அகராதி தேட, ஐயர் பாஷைமட்டும் நோக்கு புரிஞ்சுடுமோ” ரீதியாகப் பதில்கள் கிடைத்திருக்கின்றன. மொழியிலும் வட்டார வழக்குகளிலும் ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் என்னால் பல வட்டார வழக்குகளில் சரளமாக உரையாட முடியும். ஏ.கே இராமனுஜன் ஒருமுறை இப்படி எழுதினார் “சிறுவயதில் என்னுடைய மாடியறையின் மொழி ஆங்கிலம், சமயலறையில் தமிழ், வீதியில் கன்னடா”. கிட்டத்தட்ட தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு அதுதான் நிலை. எனவே, அக்ரஹாரத்துப் பாஷை, கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ் என்று சரளமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதுவே ஈழத்தமிழாக இருந்தால் வித்தியாசமாக இருக்கிறது (இந்த வித்தியாசமே, பலருக்கு ஆர்வத்தையும், சிலருக்கு அலுப்பையும் தருகிறது).

ஏன் ஈழத்தமிழ் மட்டும் வித்தியாசமாக இருக்கிறது? இதற்குப் பல காரணங்கள் உண்டு, இவற்றில் முக்கியமாக நான் கருதுவதைக் கருத்துச் சொல்லியிருக்கும் எல்லோரும் விட்டுவிட்டார்கள். அது புவியியல் ரீதியான பிளவு. கொங்கு நாட்டுக் கவுண்டர்களுடனும், தஞ்சைப் பாப்பனுடனும், செட்டிநாட்டவருடனும், மருதைக்காரங்க்யளுடனும், தமிழகத்துத் தமிழர்கள் ஒரு நாளில் பலமுறை உரசுகிறார்கள். முகத்தைப் பார்த்து ஒருவருடன் பேசும்போது அவருடைய மொழி எளிதில் புரிந்துபோகிறது. ஆனால் ஈழத்து நண்பர்களுடன் தமிழனுக்கு அப்படி உரசும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

நண்பர் இரமணியின் கருத்தையும், சகோதரி மதியின் கருத்தையும் பார்க்கப் பெரும்பாண்மை இந்தியத் தமிழர்கள், ஈழத்தமிழர்களின் பங்களிப்பையும் திறனையும் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாகத் தொனிக்கிறது. இதில் குறைத்து உண்மையாக இருக்கலாம், ஆனால் வேண்டுமென்றே உண்மையில்லை என்று தெரியும். பெரும்பாலானவர்களுக்கு அறியாமையே காரணம், அதைப் போக்க, தங்கள் திறமையும் பங்களிப்பையும் உணர்த்த ஈழத்தமிழர்களும் முயலவில்லை என்பதும் காரணம்தான். இந்தியாவிலிருந்து குமுதத்தையும், கணையாழியையும் தருவித்துப் படித்த ஈழத்தமிழர்கள் அதே தீவிரத்துடன் தங்கள் பத்திரிக்கைகளைத் தமிழகத்தில் பரப்ப முயற்சிக்கவில்லை. (இதற்குப் பின்னாட்களில் இனக்கலவரத்தினால் சாத்தியம் குறைந்துபோனது வருத்தம் தரக்கூடிய விஷயம்). இதற்குப் பெரும்பாண்மை சிறுபான்மையை விழுங்கிவிட்டது என்று காரணம் காட்ட முயற்சிக்கலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். நான் டொராண்டோ வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு பெரும்பாண்மை ஈழத்தமிழர்கள், அவர்களுடன் ஒப்பிட இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நான் இங்கு வந்ததிலிருந்து எனக்கு சமமான எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் நண்பர்களாக வாய்க்கப் பெற்றிருக்கிறேன். சொல்லப்போனால் ஊடகங்களில் பங்கேற்பவன் என்ற ரீதியாக (அதுவும் முகம் காட்டக்கூடிய தொலைக்காட்சியில்) நான் பொதுவிடங்களில் முகந்தெரியாத ஈழத்தமிழர் பலரால் அடையாளம் காணப்பட்டு இன்முறுவல் பெறுகிறேன். இங்குள்ள தமிழ் ஊடகங்கள் முழுவதும் ஈழத்தமிழருக்குச் சொந்தமானவை. அவர்கள் தங்கள் ஊடகங்களில் இந்தியத் தமிழர், அவர்கள் நிகழ்வுகள் இவற்றுக்கு இடமளிப்பதில்லை. அந்த வகையில் டொராண்டோவில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, டொராண்டோவில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் வாழ்முறைகள், நிகழ்வுகள், பிரச்சனைகள் இவற்றைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. இந்த நிலைதான் இந்தியாவிலும் காலங்காலமாக உருவாகியிருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிகிறது. எனவே வேண்டுமென்றே தவறு என்று என்னால் ஊகிக்க முடிகிறது. நண்பர்கள் மனதில் இப்படியொரு எண்ணம் விதைக்கப்பட்டிருப்பது குறித்து வருந்தத்தான் முடிகிறது.

மற்றபடி நண்பர் இரமணி செம்மங்குடி இறந்தபோது வருந்தியவர்கள் அதே காலகட்டத்திலே இலங்கையிலே இறந்த சங்கீதக்காரர் வீரமணி ஐயரை அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. என்று கேட்டிருக்கிறார். செம்மங்குடியின் மறைவுக்கு வருந்தி வலைக்குறித்தவன் என்ற முறையில் என்னால் இதைத்தான் பதிலாகச் சொல்லமுடிகிறது. நான் பிறந்த ஊருக்கருகில் வசித்தவர் செம்மங்குடி, அவரது இசையோடு வளர்ந்தவன் நான். ஈழத்து இசை மேதைகளைப் பற்றி என்னுடைய தந்தை சொல்ல நான் கேட்டிருக்கின்றேனேயொழிய அவர்களது இசையை நான் கேட்டதில்லை. எனவே, அவர்கள் பாதிப்பு எந்தவிதத்திலும் எனக்குக் கிடையாது. மறைந்துபோன வீரமணி ஐயரைப் பற்றி வலைக்குறிப்பு எழுதாதது என்னுடைய ஈழத்து நண்பர்களின் தவறு. அப்படி எழுதாமற்போனதால்தான் அவரை “என்னால் அறிந்திருக்க முடியவில்லை”.

ஒரு காலகட்டத்தில் தங்களை முன்னெடுத்துச் செல்லாமல் விட்டதும், தங்கள் திறமைகளைத் தனிமைப்படுத்திக் கொண்டதும் ஈழக்கலைஞர்களின் குறையாகவும் தோன்றுகிறது.

எனவே, சுயபச்சதாபங்கள், கோபங்கள், விரக்திகள் இவற்றையும், மறுபுறம் ஆணவம், அலட்சியம், இவற்றையும் கடந்து நெருங்கிவருவதுதான் எனக்குத் தெரிந்த வகையிலே ஒரே விடையாகப்படுகிறது.

* * *
மற்றபடி நண்பர் இரமணியின் கருத்துக்களில் இடப்பட்ட பெயர்ப்பட்டியல்களில் கிவாஜ தொடங்கி, சுஜாதா வரை பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக வரவழைத்திருப்பதும், ஊடகங்களை அவர்கள் கையகப்படுத்திக் கொண்டு ஈழத்தமிழை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்கள் என்று தொனித்திருப்பதும் வியப்பைத் தருகிறது.

என்னுடைய பதின்வயதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் வளர்ந்தவன் நான். அந்த வயதுகளில் இலங்கையைப் பற்றிய பெருங்கனவு எனக்கிருந்தது. இந்திய வானொலிகளைப் பார்க்க மிகவும் திறமையாக அவர்கள் இஒகூதா வைப் நடத்துவது (அவர்கள் ஒலிபரப்பும் சினிமாப்பாடல்களை வைத்து அல்ல) ஆச்சரியத்தையும் மரியாதையையும் வரவழைக்கும். எனக்கு மட்டுமல்ல பல இந்தியத் தமிழர்களுக்கும். வானொலி ஊடகத்தில் தங்கள் பெயரை நிலைநாட்டியதைப் போல் பிற துறைகளிலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்திருப்பார்களேயானால் இன்றைக்கு அகராதி தேடி கேட்கமாட்டர்கள்.

அந்த வயதில் எங்கள் குடும்ப நண்பரும், மிகச் சிறந்த அறிவாளியுமான பேராசிரியர் இராமசேஷன், அப்பொழுது தஞ்சை மண்ணில் கோலேச்சிய தி.க-வினரால் கோரமாகக் கொலையுண்ட சமயத்தில் “பெரியவனானால் சாதிப் பிரச்சனை இல்லாத இலங்கையில்தான் வசிக்க வேண்டும்” என்று கனவு கண்டிருந்தேன். இன்றைக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களூக்கும் உள்ள பெரிய வித்தியாசமாக அவர்களின் சாதிவெறியின்மையத்தான் நான் காண்கிறேன்.

எப்பொழுதாவது கண்ணன் சொல்லியிருப்பதுபோல ஈராக்கில் சண்டையா, பிடிடா பாப்பான் குடுமியை ரீதியாக ஈழத்து நண்பர்களிடமிருந்து வரும்போது வருந்தத்தான் முடிகிறது.

பொதுவில் இந்தியத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை அறியாமையை விவாதிக்கையில் அதையும் ஈழத்தமிழ்-பார்ப்பனத்தமிழ், ஈழத்தமிழ்-கொங்குத்தமிழ், ரீதியில் விவாதித்து அதற்குக் காரணமாக நாடகங்களில், சங்கீதத்தில், குமுதங்களில் கோலோச்சியதாகச் (செட்டியார் குமுதத்தில் ஐயங்கார் சுஜாதா எத்தனை நாள் தாக்குபிடிக்க முடிந்தது என்பது கண்கூடு) சுட்டி அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தொனிக்க எழுத வேண்டுமா?