இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வந்த செய்தியின்படி, இந்திய அணுசக்தித்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி முனைவர் ஒய்.எஸ்.ஆர்.பிரசாத் என்பவர் தனது ஓய்விற்குப்பிறது இராக்கில் பணி மேற்கொண்டார் என்றும் இது கவலையைத் தருகின்றது என்றும் கூறுகிறார்கள். பணி ஓய்விற்குப் பிறகு அவர் வேறு நாட்டில் பதவியேற்றது எந்தவகையிலும் சட்ட விரோதமான செயல் கிடையாது. ஆனால், அணுசக்தித் துறையில் வேலை செய்து பிறகு இரகசியமாக அணுகுண்டுகள் தயாரிக்க முயல்வதாக நம்பப்படும் நாட்டிற்குச் சென்றிருப்பது அவர் இந்திய அணுசக்தி இரகசியங்களை இரானுக்குக் கடத்தியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. இது கட்டாயமாக விசாரனை செய்யப்பட வேண்டிய விஷயம்தான். இதற்கு முக்கியமான காரணம் தனது அணுசக்தி ஆராய்ச்சிகளைக் குறித்த தகவல்களைப் பன்னாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு கூட்டமைப்புகளுக்கு இரான் சரியாகத் தெரியப்படுத்தவில்லை. இந்த நிலையில் சர்வதேசக கவலைகளை மதிக்காமல் இந்தியர் ஒருவர் அணுசக்தி ஆய்விற்கு ஒத்துழைத்தால் அது தவறு.

இதன் எதிரொலியாக இந்திய விஞ்ஞானிகள் அணுசக்தித் துறையில் ஒரு காலத்தில் கால்பதித்திருந்தால் அவர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது இந்திய அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்போவதாகச் சொல்கிறார்கள். இது தனிமனித உரிமை மீறலாகும். ஒரு காலத்தில் இந்திய அணுசக்தித் துறையைச் சேர்ந்த லேசர் ஆய்வுக்கூடமான Centre for Advanced Technology, Indore ல் விஞ்ஞானியாகப் பணியாற்றியவன் என்ற முறையில் எனக்கு இதன் அபாயங்கள் தெரியும்.

அணுசக்தித் துறையில் பழம் பெருச்சாளிகள் நிறைய பெருத்துவிட்டார்கள். அடியேன் சிக்கிக் கொண்டதும் இப்படியான ஒரு பெருச்சாளியிடம்தான். Indian Institute of Science போன்ற சுதந்திரமான இடத்தில் படித்துவிட்டு (அங்கு படிக்கும்போது ஆசிரியர்கள் – மாணவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. திறமைக்குத் தான் அங்கு மதிப்பு) அ.ச.து வில் வேலைபார்ப்பது எனக்கு மிகவும் சிரமமானதாகத் தான் இருந்தது. எனக்கு மட்டும் இல்லை; சராசரியாக பன்னிரண்டு பேர் வேலை பார்க்கும் அந்தக் குழுவில் என்னையும் சேர்த்து மூன்று வருடங்களில் எட்டுபேர் விலகினோம். ஒருவர் அமெரிக்கா போனார், நான் போர்த்துகல் சென்றேன், இன்னும் ஒருவர் ஜப்பான் சென்றார், இரண்டு பேர் அ.ச.துறையில் வேறு ஆய்வகங்களுக்கு மாற்றல் வாங்கிச் சென்றார்கள், ஒருவர் அறிவியலே வேண்டாம் என்று ஓடிப்போய் டுட்டோரியல் பயிற்சிப்பள்ளியைத் துவங்கினார், ஒருவர்… ஒருவர் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப்போனார். அப்படியன்றும் ஓடிப்போன நாங்கள் சோடை போய்விடவில்லை. நான் அந்த ஆய்வகத்தை விட்டு வந்தபின்பு அவர்கள் இரண்டே இரண்டு ஆராய்ச்சித் தாள்களைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள். (நான் மாத்திரம் அதற்குப் பிறகு பதினோறு ஆராய்சித்தாள்களை வெளியிட்டிருக்கிறேன்).

நாங்கள் எல்லோரும் விபரம் தெரியாமல்தான் அ.ச.து என்னும் கருங்குழிக்குள் விழுந்தோம். அங்கு இருப்பதுபோல் இந்தியாவில் வேறெங்கும் மொழிவாரி, சாதிவாரி, … மார்வாரி, திவாரி, மண்ணை வாரி, சண்டைகள் வேறெங்கும் பார்க்கக் கிடைக்காது. இந்தியவின் அறிவியல் தொழில்நுட்ப பட்ஜெட்டில் 65 சதவீதம் அ.ச.து மற்றும் விண்வெளி ஆராய்சித்துறை இரண்டுக்குமாகப் போகிறது. இதில் பின்னது விக்ரம் சாராபாய் தொடங்கி, அப்துல்கலாம் வரை தன்னலம் கருதாமல் உழைத்த தலைவர்களால் தலைநிமிர்ந்து நிற்கிறது. அ.ச.து. ஒரு காலத்தில், அதற்கென்று ஒரு இலக்கும் அவசியமும் இருந்த காலத்தில், நன்றாகத்தான் இருந்தது. இன்றைய நிலையில் அணுசக்தி ஆய்விற்கு இந்தியாவில் தேவையில்லாமல் ஆகிவிட்டது (இந்தியா, பாக்கிஸ்தான் இரண்டுமே அணுகுண்டைத் தாயாரித்து வைத்திருக்கின்றன. இவற்றில் இந்தியாவின் தொழில்நுட்பம் கனிசமாக முன்னேறியது. இந்த நிலையில் வைத்திருக்கும் அணுகுண்டுகளை எப்படி ஏவுவது என்பதுதான் சவால். கூடவே சீனாவின் அணுஆயுதங்களும் இந்தியாவிற்குச் சவால்தான். எனவே ஏவுகணைத் துறையில் இருக்கும் கட்டாயம் அணுசக்தித் துறையில் இல்லை).

மேற்கத்திய நாடுகளைப் போல இல்லாம, நம் நாட்டில் பொதுவில் எல்லோரும் (சிறப்பாக விஞ்ஞானிகள்) தங்கள் பழைய புகழில் நன்றாகக் குளிர்காய்கிறார்கள். என் அலுவலகம் இருக்கும் டொராண்டோ பல்கலைக் கழத்தின் இயற்பியல் துறையில் நோபல் பரிசு எந்தவருடமும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் ஒருவர் இருக்கிறார் (இந்திய வம்சாவளியான < a href=http://www.physics.utoronto.ca/~john/>பேராசிரியர் சஜீவ் ஜான் ) வேதியியல் துறையில் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜான் பொலானி . இவர்கள் இருவரும் லேசர் துறை சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் எனக்கு அவர்களுடன் தொடர்பு உண்டு. இருவருக்கும் தலையில் ஒளிவட்டங்கள் கிடையாது. ஆனால் இந்தியாவில் இருக்கும் சிலர் பழம்பெருமை என்னும் பரிவட்டத்தைத் தலையில் கட்டிக்கொண்டு எப்படி சூரியப்பிரகாசமாக ஜ்வலிப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இந்தத் தனிமனித ஆர்ப்பாட்டங்களைப் போலத்தான் அணுசக்தித் துறையும். அதன் தேவையும், திறமையும் குறைந்துபோன பிறகும்கூட இன்னும் வரிப்பணத்தில் கொழுப்பது குறையவில்லை.

நான் அ.ச.து வில் வேலைபார்த்த நாட்களைப் பற்றி நிறைய எழுதியாக வேண்டும். வினோதமான சகபிராணிகள், விசித்திரமான அவர்கள் போக்குகள், சாலா மதராஸி என்று முதுகுக்குப் பின் விளிக்கும் என்னுடைய குழுத்தலைவர் என நிறையவே இருக்கின்றன. விசித்திரமான அவர்கள் விதிகளுக்கு ஒரு உதாரணம், வேலையில் சேர்ந்தபிறகு நீங்கள் மேல்படிப்புப் படிப்பதாக உத்தேசித்தால் உங்கள் அலுவலகத்தில் எழுத்து மூலமாக விண்ணப்பிக்க வேண்டும், அதை அவர் பரிந்துரைத்து அந்த ஆய்வகத்தின் இயக்குநருக்கு அனுப்புவார் (இடையில் இருக்கும் “மனித வள மேம்பாட்டு அலுவலர், மண்ணாங்கட்டி ஆய்வாளர்” இவர்களையெல்லாம் சற்று மறப்போம். இயக்குநர் அதை மும்பையில் இருக்கும் அணுசக்தித் துறையின் செயலகத்திற்கு அனுப்புவார். அங்கே துறைச் செயலாளர் – ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி அதை அங்கீகரித்துத் திருப்பியனுப்புவார். பின்னர் அது அதே வழியில் இறங்குமுகமாக உங்களை வந்து சேரும். பெரும்பாலான சமயங்களில் துவாரபாலகர்களாக அமர்ந்திருக்கும் யாராவது ஒரு புண்ணியவான், உங்கள் கையெழுத்துக்குக் கீழ் உங்கள் பணியாளர் எண்ணைச் சரியாக எழுதவில்லை எனக் கோபித்துக் கொண்டு, பாம்பாகக் கடிப்பார். பரமபத சோபான படத்தில் இருக்கும் அருகஷன் என்னும் மாபெரும் பாம்பைபோல அவர் விஷம் உங்களைத் தரையிறக்கும். இப்படி இரண்டு முறை கடிபட்டால் உங்கள் படிப்பு ஆர்வம் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும்.

அப்படியன்றும் இந்தப்படிப்பிற்கு அவர்கள் உதவ மாட்டார்கள். இது உங்கள் பணி நேரம் முடிந்தவுடன் அருகில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது அண்ணாமலை போன்ற அஞ்சல்வழி கல்விக்கு, உங்கள் பணத்தையும், ஓய்வு நேரத்தையும் நீங்கள் செலவிட்டு படிப்பதற்குத்தான். இதுபோல வேலையில் சேர்ந்த உடன் இன்றிலிருந்து என்னுடைய மூளைவளர்ச்சியை உறைய வைக்கிறேன் என்று சாசனமிட்டுக் கொடுக்க வேண்டிய நிறுவனம் உலகில் வேறு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதை எதிர்ப்பதற்கென்றே ஒரு முறை அருகில் இருக்கும் இந்தோர் தேவி அகல்யா பல்கலைக் கழகத்தில் மாலை நேரத்தில் வழங்கப்பட்டுவந்த C சான்றிதழ் படிப்புக்காக நான் அனுமதி கேட்டேன். (எனக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் கூட). உடனே என்னுடைய தலைவர், உனக்குப் பாடம் நடத்தப்போவது யார் என்று அதே விண்ணப்பத்தில் சிகப்புமையால் கேட்டிருந்தார். நான் படிப்பிப்பவரைப் பற்றிய விபரங்களைப் பெற்று துணைத்தாளில் எழுதித் தந்தேன். அந்த இளைஞர் எம்.சி.ஏ படித்திருந்தவர். உடனே சளைக்காமல் நம்மாள், “நீங்கள் ஏற்கனவே பி.ஹெச்.டி பட்டம் வாங்கிவிட்டீர்கள், இனி என்ன எம்.சி.ஏ படித்தவரிடமிருந்து கற்றுக்கொள்ள?” என்று மேல் கேள்வி கேட்டார்.

இதிலிருந்து மீள எனக்குத் தெரிந்த ஒரே வழி (என்னுடைய சகாவைப் போல எனக்குத் தூக்கில் தொங்குவதில் நம்பிக்கையில்லை) அங்கிருந்து வேறு இடம் செல்வதுதான். இதற்கும் பல சாகசங்களைச் செய்துதான் வெளிவரவேண்டியிருந்தது.

இன்றைய நிலவரப்படி பார்த்தால் அணுசக்தித் துறையில் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெங்கும் சாவு இல்லை என்றுதான் தோன்றுகிறது.

* * *

நிற்க. இதெல்லாம் சராசரி (அறிவுபூர்வமாக அல்ல, மேல்மட்டத் தொடர்புகளில்) நபர்களுக்குத்தான். இந்தப் பம்மாத்தெல்லாம் இரான், இராக் சென்று ஏதாவது ஒன்றரை காசு சம்பாதிக்கலாம் என்று நப்பாசையுடன் ஓய்ந்த பிறகு ஓடுபவர்களுக்குத்தான்.

பேராசிரியர் வி.எஸ். அருணாச்சலம் , இந்திய இராணுவ ஆராய்சிசிக் கழகத்தில் இயக்குநராக இருந்தவர். ஒரு காலத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராக இருந்தவர். இவர் இப்பொழுது வேலைபார்க்கும் இடம் அமெரிக்காவில் கார்னெகி-மெல்லன் பல்கலைக் கழகம். அங்கே இருக்கும் இடம், தொழில்நுட்பக் கொள்கைகளை ஆராயும் இடம். இது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எளிதில் விளக்க ஒரே தகவல் போதும்; அவர்களுக்கு வாஷிங்டன் டி.சியில் ஒரு அலுவலகம் இருக்கிறது. இவரால் இந்திய அணுசக்தி, இராணுவ, பாதுகாப்புக் கொள்கை இரகசியங்களுக்கு எந்தவிதமான குந்தகமும் வந்துவிடாது. ஏனென்றால் இவர் இருப்பது சர்வதேசக் காவலனான அமெரிக்காவில்.

* * *

பிணந்தின்னும் சாத்திரங்கள்