ரெட்ஹாட் தன்னுடைய மேசைத்தள லினக்ஸ் வெளியீடுகளை நிறுத்திவிட்டது. பெடோரா திட்டத்திற்கு தனது ஆதரவை அளித்து அதை பெடோரா-ரெட்ஹாட்டாக மாற்றிவிட்டது. இனிமேல் ரெட்ஹாட் அதிசக்தி லினக்ஸ் வெளியீடுகளை மாத்திரமே தயாரிக்கும், அதற்குப் பணம் கொடுப்பவர்களுக்கு மாத்திரமே உதவி செய்யும். இது பற்றிய எனது முந்தைய வலைக்குறிப்பு.

இன்றைக்கு இன்னொரு பிரபலமான லினக்ஸ் வடிவமான டீபியன் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான ப்ரூஸ் பெரென்ஸ் பல்வேறு கணினி பெருநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இலவச, சிக்கலற்ற, தடையற்ற லினக்ஸ் வடிவத்தை (இதற்கு அவர் userlinux என்று பெயரிட்டிருக்கிறார்) இன்னும் ஆறு மாதங்களில் வெளியிடுவதாகச் சொல்லுகிறார். இது டீபியனின் அடிப்படையில் இருக்கும் என்கிறார். பின்னர் இன்னொரு டீபியனின் தேவை என்ன என்பதற்கு, யூஸர்லினக்ஸ் டீபியனால் தவிர்க்கப்படும் காப்புரிமை பெற்ற பிற நிரலிகளையும், வன்கலன் இயக்கிகளையும் சேர்த்துக் கொள்ளும் என்கிறார். (விஷயம் தெரியாதவர்களுக்காக; டீபியன் பரிசுத்த தளையறு மென்கலன்களை மாத்திரமே உள்ளடக்கியது, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் திறந்த ஆணைமூலத்துடன் வெளியிடப்படும் நிரலிகள் மாத்திரமே டீபியனில் தொகுக்கப்படும்).

இந்தத் திட்டத்திற்கு பல நிறுவனங்கள் ஆதரவு அளிக்கும் என்று சொல்கிறார் அவர் (இது சூஸியைச் சமீபத்தில் வாங்கிய நாவெலாக இருக்கும் என நினைக்கிறேன். நாவெலுடன் ஒரு காலத்தில் பெரென்ஸ் தொடர்புகொண்டிருந்தார். அவர் ரெட்ஹாட்டின் எதிர் துருவம் என்பதும் இந்த இடத்தில் முக்கியமானது).

எனக்கென்னமோ இது ரெட்ஹாட்டின் பெடோரா திட்டத்தின் எதிர் விளைவாகத்தான் தோன்றுகிறது. டீபியனின் சக்தி வாய்ந்த apt-get போன்ற நிரலிகளைக் கொண்ட ஒரு எளிய மேசைத்தளம் அமைக்கப்பட்டால் அது நல்லதுதான்.

ஆனால், இந்த முயற்சிகளெல்லாம் லினக்ஸ் உலகைப் பிளப்பதாக அமையக்கூடாது. ஊர் ரெண்டுபட்டால் மைக்ரோஸாப்ட் ஆண்டிக்குக் கொண்டாட்டம்தான்.