இந்திய விடுதலைக்குப் பல காரணங்கள் உண்டு. தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் பொருளாதார நிருபர் சுவாமிநாதன் அங்கலேஷ்வர் ஐயர் விடுதலைக்கான பொருளாதார காரணங்களை முன்வைக்கிறார்.

வல்லரசுகள் பிற நாடுகளை அடிமைப்படுத்த முக்கிய நோக்கம் அதிலிருக்கும் பொருளாதார இலாபங்களே. அவ்வாறான பொருளாதார ஆதாயங்களை முன்னிருத்தியே அமெரிக்கா தற்பொழுது இராக்கில் தினந்தோறும் ஒரு பில்லியன் டாலர் தனது இராணுவத்திற்குச் செலவழித்து வருகிறது. தனது இளைய வீரர்களைக் களப்பலி கொடுக்கிறது. வருங்காலத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் சந்தையை தன் கட்டுப்பாட்டில் நிறுத்த அமெரிக்காவிற்கு இந்த முதலீடு தேவையாக இருக்கிறது.

பிரிட்டானியர்கள் இந்தியாவிற்கு வந்ததும் வியாபார நோக்கம் கருதிதான். பின்னாட்களில் இந்தியாவைக் கைப்பற்றி காலணியாதிக்கத்திற்கு உட்படுத்தினாலும், ஆள அவர்களுக்கு இருந்த ஒரே நோக்கம் தாங்கள் வந்த காரணமான வர்த்தகத்தை உறுதிப்படுத்தல்தான். அடிமைகளிடம் அதிக வரி வசூலிப்பது ஆள்பவர்களுக்கு அவர்களை அடிமைப்படுத்த முக்கிய நோக்கம். ஆனால் இந்தியாவில் ஒரு அளவிற்குப்பிறகு மன்னர்களை வென்று அடிமைப்படுத்துவதில் அவர்களுக்கு ஆர்வம் குறைந்து போயிற்று. இதற்குக் காரணம் அவர்களை அடிமைப்படுத்த ஆகும் செலவுதான். அது முடியாத பட்சத்தில் பல மன்னர்களுடன் அவர்கள் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டு தங்கள் வணிக சாத்தியக்கூறுகளைப் பலப்படுத்திக் கொண்டார்கள்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தங்கள் ஆதிக்கத்திலிருந்த கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தங்கள் படைகளுக்கு ஆகும் செலவை அவர்களிடமிருந்து வரியாக பிரிட்டன் வசூலிக்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் இது முடியால் போக, இந்தியப்படைகளுக்கு ஆகும் செலவை அவர்கள் பிரிட்டனிலிருந்து ஈடுகட்டியாக வேண்டியிருந்தது. இவ்வாறாக, காலணியாதிக்கத்தின் பொருளாதாரச் சமன்பாடுகள் பிறழத் தொடங்க அவர்களின் வெளியேற்றம் துரிதமாக்கப்பட்டது. இந்த உண்மையை இந்தியப்பாட நூல்கள் போதிப்பதில்லை என சுவாமிநாதன் ஐயர் வருந்துகிறார்.

ஒரு காலத்தில் சோஷலிசவாதியாக இருந்து வர்த்தகமயமாக்கலை வெறுத்து பின்னர் சந்தைப் பொருளாதாரத்தின் முக்கிய கொள்கை பரப்புச் செயலாளராக ஆனவர் திரு ஐயர். இவரது கட்டுரைகள் பலவும் ஒட்டுமொத்த சந்தை சரணாகதியை வலியுறுத்துபவை.

இனி, இதன் மீதான என் கருத்து; அப்படியே பொருளாதார சாத்தியங்களால் மாத்திரமே பிரிட்டானியர் வெளியேறியிருந்தாலும் அதுவும் காந்தி மற்றும் காங்கிரஸின் வெற்றியாகத்தான் அறியப்பட வேண்டும். இந்தியப்படைகளுக்கு ஆகும் செலவைத் தங்கள் நாட்டிலிருந்து ஏன் அவரகள் ஈடுகட்ட வேண்டியிருந்தது? அதற்கு முக்கிய காரணம், ஒரு அளவிற்கு மேல் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியர்களிடம் அவர்களால் வரியை உயர்த்த முடியாமல் போனதுதான். காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இதை ஆணியாக அவர்கள் நெற்றியில் அறைந்தது என்றால் அது மிகையில்லை. வரிகொடா இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எரிக்கப்பட்ட பிரிட்டானிய துணிகள் என பலவகைகளிலும் ஐயர் சொல்லும் சந்தை நஷ்டங்களுக்கு காங்கிரஸால் உள்ளாக்கப்பட்டனர்.

இன்றைய சந்தை குழூஉக்குறிகளால் இவர் விவரிப்பதைத்தான் வரிகொடா இயக்கம் என்று காந்தி சுருக்கமாக பாமரர்கள் மத்தியில் பரப்பினார்.