நேற்று இந்தியாவின் குளிர்திரவ ராக்கெட் சோதனை வெற்றி பற்றிய செய்தியத் தந்திருந்தேன்.

இந்தச் செய்தி தொழில்நுட்ப வட்டாரங்களில் பலவிதமாக அலசப்பட்டது. இவற்றின் சாரம் கிட்டத்தட்ட Wired News செய்தியையே ஒத்திருப்பதால் அதை முன்னிருத்தி என்னுடைய கருத்துக்கள்; 1. இந்தச் சோதனை வெற்றி இந்தியரை நிலவிற்கு அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டம்; இது ஒரு பெரிய்ய்ய கனவு. இந்தக் கனவு இப்பொழுது இந்தியாவிற்கு இருப்பதுபோலத் தோன்றவில்லை. அப்படிக் கனவு இருந்தாலும் அது மெய்ப்படத் தேவையான விஷயங்கள் நம்மிடம் இல்லை. 1. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரவுசெலவுத் திட்டம் நாஸா-வுடன் ஒப்பிட மிகவும் சோகையானது. நாஸாவுக்கே இனிமேல் மனிதனை நிலவுக்கு அனுப்பப் போதுமான சக்தி இல்லை என்று சொல்கிறார்கள். வீம்புக்கு என்று சீனா ஒருவரை அங்கே அனுப்பிப் பார்த்தது. இது இனிமேல் தொடரும் என்ற நம்பிக்கையும் இல்லை. (சீனாவின் இந்த முயற்சி அதன் வணிகத்தில் பேரம்பேசும் திறனை அதிகரிப்பதற்காகத்தான் என்று பலரும் நம்புகிறார்கள்).

குளிர்திரவ ராக்கெட்டுகளால் மனிதனை நிலவுக்கு அனுப்பமுடியாது என்பதுதான் தொழில்நுட்ப நிச்சயம்.

ஆனால் இந்தியாவிற்கு நிலவிற்கு ஒரு ஆளில்லாத ராக்கெட்டை விட்டுப்பார்ப்பதற்கு ஆசை இருக்கிறது. 2010 வாக்கில் ஐரோப்பாவுடன் இணைந்து ஒரு சிறிய விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு (நிலவிலும் அது தரைதானா?) ஆசைப்படுகிறது. அப்படியாக பிரதமர் வாஜ்பாயி செங்கோட்டையில் நின்று கூறிவிட்டார்.

2. இது கண்டம் தாவும் ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியாவிற்கு உதவும் – மாபெரும் அபத்தம். கண்டம் தாவும் ஏவுகணையைத் தயாரிக்க இந்தியா ஏற்கனவே வெற்றிகண்ட பிஎஸ்எல்வி (PSLV) மாத்திரமே போதும். உலகில் எந்த நாடுகளும் கண்டம்தாவும் ஏவுகணைகளில் குளிர்திரவ ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதில்லை.

கண்டம் தாவும் ஏவுகணை இந்தியாவிற்குத் தேவையில்லை. ஏனென்றால் ஆசியாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் இருப்பவர்களுக்கு இந்தியா நண்பன்தான். இந்தியாவின் எதிரிகள் எல்லாருக்கும் இந்தியாவுடன் எல்லைத் தொடர்பு உண்டு (சீனா, பாக்கிஸ்தான்). இவர்களைத் தேட கண்டம் விட்டு கண்டம் பாயவேண்டிய அவசியமில்லை. இந்தியாவிடம் ஏற்கனவே அணுகுண்டு இருக்கிறது. அதை அள்ளி யார் தலையிலாவது போடவேண்டுமானால் தேவையான ஏவுகணைகளும் கைவசம் உண்டு. சீனாவுக்கு வேண்டுமானால் அமெரிக்காவை மிரட்டும் ஆர்வமும் அவசியமும் இருக்காலாம், இந்தியா.. சேச்சே.

3. இந்தத் தொழில்நுட்பம் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ரஷ்யாவிலிருந்து இந்தியா பெற்றது

இந்தக் கூற்றிலும் உண்மையில்லை. சோவியத்தின் அழிவிற்குப்பிறகு ரஷ்யா இந்தியாவிடம் தனது பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியாவிடம் விற்கப்பார்த்தது. அவற்றில் குளிர்திரவ ராக்கெட்டுகளும் அடக்கம். ஆனால் அமெரிக்கா சோவியத்தின் கையை முறுக்கி இது இந்தியாவிற்கு வரவிடாமல் தடுத்துவிட்டது. எனவேதான் இந்தியர்களுக்கு இதைத் தயாரித்துச் சோதித்துப்பார்க்க இத்தனை நாள் ஆகியிருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியாவிற்கு இது தேவைதானா என்பதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுத உத்தேசம்.