சென்ற சனிக்கிழமையன்று மின்சார இழப்பினால் வீட்டில் உட்கார முடியாமல் குடும்பத்தோடு டொராண்டோவிற்கு வடக்கே 100 கி.மி. தொலைவிலுள்ள சிம்கோ ஏரிக்குச் சென்றிருந்தேன். நல்ல வெயிலில் வந்திருந்தவர்கள் மின்சாரம், இணையம், மின்னஞ்சல் போன்ற கவலைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீரில் மகனுடன் ஆடிக் கழித்தபின் உட்காரும் பொழுது அருகில் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும் ஒருவர் வந்தார். பார்ப்பதற்குச் சராசரி குடிமகனைப் போலிருந்த அவர், அடுத்த பதினைந்து நிமிடத்தில் கமக்கட்டில் வைத்திருந்த மாபெரும் பையைத்திறந்து அலைகளில் பயணிக்க உதவும் surf board (இதற்குத் தமிழில் என்ன பெயர் – அலைப்பலகை) கோர்த்து, பாய்மரத்தைக் கட்டி, அலைகளில் தவழத் தயாராகிவிட்டார். நெஞ்சளவு தண்ணீருக்கு பலகையை இழுத்துச் சென்ற அவர் கண்ணிகைக்கும் நேரத்தில் அதில் ஏறிக் காற்றில் மறைந்து போனார்.

நம்மூரில் அறுபது வயது சராசரி குடிமகன் என்ன செய்கிறார்? பனி ஓய்வுக்குப் பிறகு இன்னும் இரண்டு மூன்று வருடம் எப்படி வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார். சனிக்கிழமைகளில் ஏதாவது செய்து இன்னும் நாலு காசு எப்படிப் பார்க்கலாம் என்றுதான் அவரது முயற்சிகள் இருக்கும். ஏன் அறுபது வயதில் அவர் இன்னும் நாலு காசு பார்த்தாக வேண்டும்?

1. வயதுக்கு வந்த மகளுக்கு நல்ல வரனாகப் பார்த்து தட்சினை கொடுத்துக் கரையேற்றியாக வேண்டும்.

2. கல்லூரியில் படிக்கும் மகனுக்கு படிப்புச் செலவுக்குப் பணம் வேண்டும்.

3. வீடு கட்ட வாங்கிய கடனில் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.

4. பெரும்பாலும் மேற்சொன்ன எல்லா காரணங்களும்.

வயது வந்த மகள் அதே சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அதே வரனை எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பாள். பொழுதுபோக்க விக்ரம், விஜய், அஜீத் இவர்களை சின்னத் திரையில் பார்த்துக் கொண்டிருப்பார். பார்க்காத சமயத்தில் பக்கத்துவீட்டுத் தோழியுடன் விக்ரம், விஜய், அஜீத் இவர்களைப் பற்றிய கனவுகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார். ஒழிந்த சமயத்தில் அம்மாவிற்கு சமையலில் ஒத்தாசை செய்வார் (ஒரு காப்பிக் கூடப் போடத் தெரியாவிட்டால் வருங்காலத்தில் ‘தன்னுடைய விக்ரமுடன்’ எப்படிக் குப்பை கொட்டுவது). பலத்த கட்டாயத்தில் நாலு கீர்த்தனையோ, க்ரோஷா பிண்ணலோ, நம்மூருக்குச் சற்றும் தேவையில்லாத ஸ்வெட்டர் போடவோ கற்றுக் கொள்வார்.

வயது வந்த மகன் என்ன செய்வார்? காலையில் எழுந்து அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில் கல்லூரி செல்வார். அப்பா கட்டிய பணத்தில் கல்லூரியில் பெஞ்சு தேய்ப்பார். மாலை அப்பா கைச்செலவுக்குக் கொடுத்த பணத்தில் நண்பர்களுடன் டீ/பிஸ்கட், பியர்/சமோசா எனக் கையில் இருப்பதற்குத் தகுந்தபடி செலவு செய்துகொண்டிருப்பார்.

இந்த இருபாலருக்கும் தங்கள் வயதுக்கேற்றபடி கனவுகளும் நடவடிக்கைகளும் அவசியம் வந்திருக்கும். திருவாளர் தெருவில் எந்த நேரத்தில் எந்தப் பெண் எந்த உடையில் வருவார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்திருப்பார். திருவாட்டி அந்த நேரத்தில் அந்தப் பையன் பார்த்தாகவேண்டி அதே உடையில் காட்சியளிக்கத் தயாராக இருப்பார். கடைக்கண் பார்வைகளில் கனவுகள் விரியும். கால் தரையில் கோலமிடும், கை மோட்டார் பைக்கினை முறுக்கித் திருகும்.

அப்பா.. உடல் தேய, முப்பது வருடமாக உட்கார்ந்திருக்கும் நாற்காலி தேய வரனுக்குக் கொடுக்க வேண்டிய தட்சினையைப் பற்றியும், மகனுக்கு வேலைக்காகக் கொடுக்க வேண்டிய இலஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்து டைப்-பி டயாபடீஸ்க்குச் சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்து போவார்.

ஒரு நாளில் சராசரி இரண்டு மணி நேரம் உழைத்து அந்தப் பையனால் தன்னுடைய படிப்பிற்குச் சம்பாதித்துக் கொள்ள முடியும். (வேலை இல்லை என்று சொல்லாதீர்கள், நம்மூரில் மளிகைக் கடைகளிலும், காப்பி கிளப்புகளிலும் ஆட்களுக்கு எப்பொழுது தேவை இருந்து கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மக்டொனால்ட்களிலும் இருக்கும் அதே அளவு ஆள் தேவை நம்மூரிலும் உண்டு). சுயமாகச் சம்பாதித்துப் படித்தால் படிப்பின் அருமை தெரியும். படிப்பை நன்றாக முடித்தால் நல்ல வேலை தானாகக் கிடைக்கும் என்ற உண்மை புரியும். கட்டுகிற பணத்திற்குப் பாடம் சொல்லித் தராத ஆசிரியரை நெஞ்சு நிமிர்த்திக் கேள்வி கேட்கத் தோன்றும். நாளில் இரண்டு மணிநேரம் உடலை வருத்துவது தன்னுடைய படிப்பிற்காக என்று தெரியும் பொழுது படிப்பில் தன்னால் நாட்டம் வரும். ஸ்ட்ரைக் செய்து இரண்டு நாட்களை இழந்தால் முதுகை வலிக்கும். ஒழிந்த நேரத்தில் உருப்படியாக எப்படி விளையாடுவது என்பது தன்னால் தெரியவரும். கோலமிடும் கால்களைக் காப்பாற்றியாக வேண்டிய கடமை தனக்கு இருப்பது புரியும்.

மாறாக, உடல் தேய்ந்துபோகும் நிலையில் இருக்கும் அறுபதின்மர் உழைப்பை நீட்டிக்க முயல்வதால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. உடல் ஈடுகொடுக்காத நிலையில் அவருடைய உற்பத்தித் திறன் குறைகிறது. உடல் ஒத்துழைக்காத நிலையில் கவலைகள் மிகுந்து போகின்றன. இந்தச் சுழற்சித் தொடர்ந்து மொத்தத்தில் எந்தப் பயனும் இல்லாமல் போகின்றது.

உழைக்க வேண்டிய வயதில் உடம்பு வளர்த்தும், ஓய வேண்டிய வயதிலும் ஓடாய்த் தேய்ந்தும் நம் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.