நேற்றைக்கு அண்டகோள விலாசம் என்னும் புத்தகம் ஒன்றை மதுரைத் திட்டதில் உள்ளிடும் முயற்சிகளைக் தொடங்கியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரைத் திட்டத்திற்கு நான் செய்யும் உதவி இது.

டொராண்டோ பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்த புத்தகம் இது. சுவாரசியமாக இருக்கிறது. நூலின் காலம் தெரியவில்லை. 1952ல் சென்னை மாகண நூலகத்தினால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் சில வரிகள் விடுபட்டுப் போயிருக்கின்றன. நூலை எழுதியவர் வேம்பத்தூர் முத்து வேங்கடசுப்பையர் என்பவர். அன்றைய அறிவியல் புரிதல்களின் படி அண்டத்தை விவரிக்கப் புறப்பட்டிருக்கிறார் ஆசிரியர். புத்தகத்தில் நான்கு பாகங்கள் இருக்கின்றன. முதலாம் பாகம் பாதள லோகத்தை வருணிக்கிறது. இரண்டாம் பாகம் புவியின் நிலப்பகுதிகளை வருணிக்கிறது. மூன்றவதாக கடல்கள், தீவுகள், தீவுகளின் ஜீவராசிகள் போன்றவை வருகின்றன. கடைசியாக ஒன்பது கோள்கள், சப்தரிஷி மண்டலம் என ஆகாயத்தைப் பற்றிய அறிவுகள் சொல்லப்படுகின்றன.

அட்டகாசமாக Definitions of Units என்று அலகுகளை வரையறை செய்துகொண்டு உள்ளே நுழைகிறார் வேங்கடசுப்பையர்;

பானு வின்கதிர் தூள்பர மாணுவா
மான தூளிரண் டோரணு வவ்வணுத்
தான மும்முடி சாற்றுந் திரேணுவா
மான மிரண்டுகொண் டாலோர் மயிர்நுணி

(ஒரு சாளரத்தின் வழியே சூரியனின் கிரணங்கள் செல்லும்போது கண்ணுக்குத் தெரியும் சிறிய துகள் பரமாணு எனப்படும். அந்தப் பரமாணு இரண்டு கொண்டது அணு. அணுவில் மூன்று ஒன்று சேர்த்தால் திரேணு. திரேணு இரண்டு சேர்த்தால் மயிரின் நுணி)

இப்படியாக

அண்ட வுன்னத நூறு கோடியாம்
அதன டிக்கனங் கோடி யாகுமேற்
கொண்ட பொற்பதி கோடி யுன்னதங்
கூறு மத்தியின் வேதி கைக்கனம்
விண்ட வுன்னத நூறு பத்தென
விசால மோவிரண் டாயிர மாமே
தொண்ட னப்பர வுருத்திர பூதருஞ்
சூழ நிற்ப வரியணை யின்மேல்

(அண்டத்தின் உன்னதம் நூறு கோடி, அதன் அடித்தொட்ட கனம் கோடி, அதன்மேல் பொற்பதியின் உயரம் கோடி, அதன் மத்தியில் இருக்கும் வேதிகையின் உயரம் ஆயிரம் யோசனை. அதனுடைய அகலம் இரண்டாயிரம் யோசனை….)

என்று பிரபஞ்ச சாத்தியங்களாக அலகுகள் விரிகின்றன. பழக்க புத்தி போகாமல் தவளைப் பாய்ச்சல் பாய்ந்து, 256ஆம் பாடலை எடுத்தால் அங்கே எமனின் கழுத்தில் இருக்கும் மாலையின் நீளம், (ஏறிவரும் எருமையின் திசைவேகம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதை vector quantity ஆக அல்லது Scalar ஆக விவரிக்கிறாரா என்ற ஆர்வமும் பொங்குகிறது).

கிட்டத்தட்ட இதேபோன்ற பாடல்களை வைத்துக் கொண்டுதான் மருத்துவக்குடி அப்பண்ணய்யர்வாள் குமாரர், அ. சுந்தரேஸ தீட்சிதர் பாம்புப் பஞ்சாங்கத்தில் “பிங்கல வருடத்தில் நம் தேசத்தில் தெரியக்கூடிய கிரகணங்கள் இரண்டு” துல்லியமாக சூரிய, சந்திர கிரகணங்களை கணித்துச் சொல்கிறார் என்பதும் (அதற்கு மேல் போய், கேப்டவுன் தென்னாப்பிரிக்காவிற்கு கால வழு திருத்தங்களையும் கூடவே) ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த எம கிண்ணரங்களையெல்லாம் கடாசிவிட்டு axiamatic foundationல் இந்திய வான சாஸ்திரத்தை யாராவது எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.