நேற்று அகிரா குரோஸாவா-வின் ரஷோமோன் திரைப்படத்தை இரண்டாம் முறையாக கிடடத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். அந்த வயதில் புரியாத குரோஸாவாவின் மேதமை இப்பொழுது எளிதாகப் புலப்படுகிறது. ஒரு கொலை-ஒரு கற்பழிப்பு குறித்த நான்கு பேரின் வாக்குமூலங்கள்தான் படம். ஒரு வழிப்பறியோன், கற்பழிக்கப்பட்டவள், அவள் கணவனும் கொலையுண்டவனுமானவனின் ஆவி, சம்பவத்திற்குச் சம்பந்ந்தமில்லாத, ஆனால் பார்த்ததாகச் சொல்லிக்கொள்ளும் விறகுவெட்டி, இவர்கள் நால்வரின் வாக்குமூலம் புதிரைப் போல படத்தில் துண்டு துண்டாகக் காட்டப்பட்டிருக்கிறது. பிறழாத உண்மை என்பதைப் பற்றிய கவிதை இந்தப் படம். கவிதைதான், சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும், செதுக்கியிருக்கும் நுட்பத்திலும் பார்வையாளரை படத்தில் ஒன்றச் செய்யும் நேர்த்தியிலும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இன்றும் ஈடில்லை. சம்பவங்களை வாக்குமூலங்களின் மூலம் துறத்தாமல், பிறழாத உண்மை என்பது என்ன? பார்வையாளனின் பங்கு உண்மையில் எத்தனை வீதம் போன்ற சிக்கல்களை அவர் அனுகியிருக்கும் விதம் பற்றியும், காட்சியமைப்பு, இசை இவற்றுக்காகவும் இன்று இரவு காசெட்டைத் திரும்பக் கொடுக்குமுன் ஒரு முறை பார்த்தாக வேண்டும்.

குரோஸாவா படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.(வாரம் தோறும்), இது இரண்டாவது வாரம். சென்ற வாரத்தில் சிச்சினின்னோ ஸாமுராய் (செவன் சாமுராய் – ஆங்கிலத்தில்) பார்த்தேன். வெஸ்டர்ன் படங்கள் முதல் ஸ்டார் வார்ஸ் வரை குரோஸாவா எப்படி எளிதாகத் தன் ஆளுமையினால் பாதித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த வரிசையில் இகிரு பார்க்கலாமென்று இருக்கிறேன்.